இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் டிடிவி தினகரன் பேட்டி


இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் டிடிவி தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2017 11:52 AM IST (Updated: 24 Dec 2017 11:52 AM IST)
t-max-icont-min-icon

இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். நல்லாட்சிதர தியாகத் தலைவி சின்னம்மாவால் தான் முடியும் என மக்கள் நம்புகின்றனர் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.



சென்னை,


ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானது.

இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர்.

கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் விஸ்வரூபம் எடுத்தது போன்று இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளித்தன. பணப்பட்டுவாடா புகார் காரணமாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சூழ்நிலை ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் 21-ந்தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது

பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்து சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெரும்வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். வெற்றியை நோக்கிய முன்னிலையில் டிடிவி தினகரன் பயணித்துவரும் நிலையில், மூன்றே மாதங்களில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியை முடிவுக்கு வரும் என்ற கருத்தை பதிவிட்டு உள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் எனக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் எனது வெற்றி உறுதியாகி உள்ளது.

தமிழக மக்களின் எண்ணத்தைதான் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த வெற்றிக்காக பாடு பட்ட கட்சியின் 1.5 கோடி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவினாசி, கோவை, அருமனை சென்றபோதும் அங்குள்ள மக்கள் குக்கர் சின்னம் வெற்றி பெற வேண்டும் என்று என்னைவாழ்த்தினர். மக்கள் விரும்பியபடி வெற்றி பெற்றுள்ளேன். இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். நல்லாட்சிதர தியாகத் தலைவி சின்னம்மாவால் தான் முடியும் என மக்கள் நம்புகின்றனர். அதனால் தான் ஆர்.கே.நகரில் வெற்றியை தந்துள்ளனர். 

சின்னமாக இருந்தாலும் சரி, கட்சியாக இருந்தாலும் சரி வேட்பாளரை வைத்தே அது நிர்ணயிக்கப்படுகிறது. சின்னமோ, கட்சியோ யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். எம்.ஜி.ஆர். கையில் இருந்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா  போன்றவர்கள் கையில் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அம்மாவிற்கு அடுத்த படியாக யார் வரவேண்டும் என்ற சிறந்த பரிசை மக்கள் வழங்கி உள்ளனர் என்றார். 

Next Story