ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது எடப்பாடி பழனிசாமி கருத்து


ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது எடப்பாடி பழனிசாமி கருத்து
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றார்.

கரூர்,

திண்டுக்கல்லில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கரூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து உங்களது கருத்து?

பதில்:- ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் அவர் (ரஜினிகாந்த்) அரசியலுக்கு வந்திருக்கிறார்.

கேள்வி:- கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் தமிழக மக்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளாரே?

பதில்:- நான் இன்னும் அவரது பேச்சை முழுமையாக படிக்கவில்லை.

கேள்வி:- 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கூறியுள்ளது பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்:- அது அவரது தனிப்பட்ட கருத்து.

கேள்வி:- ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு உண்டாகுமா?

பதில்:- நடிகர் ரஜினிகாந்த் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அதுவும் 2021-ம் ஆண்டில் தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதாக மேடையில் இருக்கிறபோது கட்சி நிர்வாகிகள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் அவர் (ரஜினிகாந்த்) என்ன சொன்னார், என முழுமையாக படித்து பார்த்த பின் பதில் கூறப்படும். அ.தி.மு.க. இரு மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. உயிரோட்டமாக உள்ள கட்சி. அ.தி.மு.க.வை வெல்ல இதுவரை யாரும் பிறந்தது இல்லை. பிறக்கப்போவதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story