ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்: கட்சி தலைவர்கள் கருத்து


ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்: கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 31 Dec 2017 10:00 PM GMT (Updated: 31 Dec 2017 7:30 PM GMT)

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நேற்று அறிவித்து இருக்கிறார். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

இந்திய திருநாட்டின் குடிமகனாக இருக்கும் அனைவருக்கும் கட்சி தொடங்க உரிமை இருக்கிறது.

அமைச்சர் ஜெயக்குமார்:-

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. வலிமையான ஜனநாயகம் என்ற அடிப்படையில் இந்திய திருநாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. கட்சிக்கு உரிய அங்கீகாரம், மக்கள் ஆதரவு என்பதை தீர்மானிப்பது மக்கள் தான். அவர்கள் தான் இறுதி எஜமானர்கள். அந்த வகையில் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய என்னுடைய இனிய சகோதரர் ரஜினிகாந்துக்கு என்னுடைய வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். யார் கட்சி ஆரம்பித்தாலும் வாழ்த்து சொல்வது ஒரு மரபு. அந்த மரபுப்படி நான் வாழ்த்து சொல்கிறேன்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் வருவதை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர் களத்துக்கு வரட்டும். கொள்கைகளை சொல்லட்டும். மக்களுக்கான என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று பார்ப்போம். அதன்பிறகு மற்றதை பற்றி பேசுவோம்.

தமிழிசை சவுந்தரராஜன்

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன்:-

பிரதமர் மோடி, கடந்த 3½ ஆண்டுகளாக ஊழலில் புரையோடி போய் இருந்த நிர்வாகத்தை ஊழலற்ற முறையில் மாற்றி இருக்கிறார். தமிழ்நாட்டில் நாங்கள் அதை தான் முன்னிறுத்தி வருகிறோம். எங்களுடைய முயற்சி காலதாமதம் ஆனாலும் நிச்சயம் வெற்றி பெறும். ரஜினிகாந்தும் இதை வலியுறுத்தி தான் அரசியலை தொடங்குவேன் என்று சொல்லி இருக்கிறார். அரசியல் களத்தில் குதிக்க போகிறேன் என்று துணிச்சலாக அறிவித்ததற்கு என்னுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன். வருங்கால திட்டங்களை எப்படி தீட்டுகிறார் என்பதும் நிர்வாக ரீதியாக அரசியல் கட்சியாக எப்படி பிரதிபலிக்கிறார் என்பதும் பொறுத்து இருந்து பார்த்து தான் சொல்ல முடியும். களங்கமில்லாத களத்தை உருவாக்குவதற்காக களம் இறங்கி இருக்கிறேன் என்று அவர் சொல்லி இருப்பதை நான் பாராட்டுகிறேன்.

திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்:-

ரஜினிகாந்த் என்னுடைய நீண்டகால நண்பர் என்ற முறையிலும், காங்கிரஸ் கட்சி சார்பிலும் அவருடைய அரசியல் வருகையை மனதார வரவேற்கிறேன். அ.தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அரசியலில் இறங்கியுள்ளார். அறை முழுவதும் குப்பை இருக்கும் போது ஒரு மூலையை மட்டும் சுத்தம் செய்வது சரியாக இருக்காது. அதன்படி, இந்திய அரசியலில் தமிழ்நாடு ஒரு மூலை தான். தமிழ்நாட்டை பார்த்து இந்தியாவே சிரிக்கிறது என்று அவர் சொல்கிறார். ஆனால் மோடி அரசை பார்த்து உலகமே சிரிக்கிறது. எனவே மத்திய அரசுக்கு எதிராகவும் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

தி.மு.க

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன்:-

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் என்ன தடுக்கவா முடியும்?. அரசியலுக்கு வருவது அவருடைய இஷ்டம். நன்றாக யோசித்து தான் அரசியலுக்கு வருகிறார். தமிழக அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் மத்தியில் வெற்றி பெற வேண்டும். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் எந்த பாதகமும் எங்களுக்கு கிடையாது. எங்கள் பலமும், பாணியும் தனி. ஆன்மிக அரசியல் செய்வேன் என்று கூறி இருப்பது ரஜினிகாந்தின் பாணி. அரசியல் களத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் களத்தில் யார் வந்தாலும் அதை சமாளிக்க தி.மு.க.வுக்கு ஆற்றல் இருக்கிறது.

கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-

நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக சொல்லி வந்தார். இறுதியாக அவர் கட்சியை தொடங்குவதாக அறிவித்து இருப்பதை நான் வரவேற்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

தமிழ்நாட்டு அரசியலை மிகவும் கடுமையாக சாடி இருக்கிறார். பல்வேறு கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கருத்தும் இதுதான். சட்டமன்ற தேர்தல் அறிவித்த பிறகு கட்சி பெயர், கொள்கையை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் முழுமையாக அறிவித்த பிறகு, நிர்மானிப்பது நல்லதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். மன்றங்களை பலப்படுத்துவதற்கான வேண்டுகோளை வைத்து இருக்கிறார். அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மனம் திறந்து பேசி இருக்கிறார். தன்னுடைய அரசியல் பயணம் சாதி, மத சார்பற்ற ஆன்மிக அரசியலாக இருக்கும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது. இதை வைத்து பார்க்கும் போது அவர் சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் சேர்ந்து அரசியல் செய்ய போவது இல்லை என்பது தொடக்கத்திலேயே தெளிவுப்படுத்துவதாக நான் நம்புகிறேன். அவர் எடுத்து இருக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்:-

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அரசியல் குறித்த அவரது அறிவிப்பை சில ஆண்டுகளாகவே பல துறையை சேர்ந்தவர்கள் நியாயமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்திலே அரசியல் கட்சியை தொடங்குவதற்கும் அதன் சார்பிலே மக்களை சந்திப்பதற்கும் யாரும் இடையூறாக இருக்க முடியாது. மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அங்கீகாரம் பெறலாம். ஆனால் பொது வாழ்க்கை என்று தேர்தலில் நிற்கும்போது இறுதியில் மக்கள் தான் எஜமானர்கள்.

மு.க.அழகிரி

தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி:-

அரசியல் பிரவேசத்துக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவருடைய வருகை தாக் கத்தை ஏற்படுத்துமா? என்று இப்போது சொல்ல முடியாது. என்னுடைய நெருங்கிய நண்பர். என் தந்தையாருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். அவருக்கும் என் தந்தையாரை ரொம்ப பிடிக்கும். மாற்றங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். அவருடைய எண்ணங்கள் ஈடேற நான் வாழ்த்துகிறேன்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

எந்த ஓர் அமைப்பும், யாரும் அரசியலுக்கு வரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில், அவர்கள் அரசியலுக்கு வந்து கட்சியை தொடங்கும்போது, அந்த கட்சிக்கு என்ன கொள்கை? என்ன செயல்முறை? எதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்? என்பதை பொறுத்துதான் அந்த கட்சிக்கு மக்களுடைய வரவேற்பா? எதிர்ப்போ? இருக்கும். ஆன்மிக அரசியல் என்று அவர் சொல்வது இருக்கிறதே, அது அரசியலையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தக்கூடாது. இது முற்றிலும் அவருடைய குழப்பத்தை காட்டுகிறதே தவிர வேறொன்றுமில்லை. ஆன்மிக அரசியலை அவர் தெளிவுப்படுத்தட்டும். அதற்கு பிறகு தெளிவான கருத்தை நான் கூறுகிறேன்.

பாரிவேந்தர்

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர்:-

தேசப்பற்றும், நேர்மறையான சிந்தனையும், நல்ல உள்ளமும் கொண்ட அரசியல் தலைவர்களுக்கான பஞ்சம் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நேரத்தில் ரஜினிகாந்த் அரசியல் நுழைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அந்தவகையில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதோடு, அவரின் நல்ல நோக்கங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

ரஜினிகாந்தின் இந்த தீர்க்கமான முடிவு, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையையும், மறுமலர்ச்சியையும் உருவாக்கும். தமிழக அரசியலில் தடம் பதிக்கும் என்னுடைய அன்பு சகோதரர் ரஜினிகாந்துக்கு என் முழுமையான நல் ஆதரவினை தெரிவித்து, வாழ்த்தி வரவேற்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story