ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்பு நன்றாகத்தான் இருக்கிறது ரஜினிகாந்துக்கு, டி.டி.வி.தினகரன் பதில்


ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்பு நன்றாகத்தான் இருக்கிறது ரஜினிகாந்துக்கு, டி.டி.வி.தினகரன் பதில்
x
தினத்தந்தி 31 Dec 2017 10:15 PM GMT (Updated: 2018-01-01T01:47:02+05:30)

ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்பு நன்றாகத் தான் இருக்கிறது என்றும், அதை செயல்படுத்தும் மனிதர்கள் தான் சரி இல்லை என்றும் ரஜினிகாந்துக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை அடையாரில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதில் சொல்ல போவது இல்லை

எங்கள் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஆதரவாக இருக்கிற தமிழக மக்களுக்கும், வெளிநாட்டில் வசிக்கும் உலக தமிழர்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வருகிற புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்.

நமது தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகுவதற்கு இந்த புத்தாண்டு வழிகாட்ட வேண்டும். வருங்காலம் நிச்சயம் வெற்றியை தரும். தமிழக மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் எல்லா நலமும் பெற வாழ்த்துகள். வருகிற புத்தாண்டில் இருந்து கோமாளிகளுக்கு நான் பதில் சொல்ல போவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஆட்சியை அமைப்போம்

கேள்வி:- ஜெயலலிதா ஆட்சியை மீட்டெடுப்போம் என்று சொல்லி வருகிறீர்கள்? உங்கள் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வர வேண்டும் என்று சொல்கிறீர்களா?

பதில்:- நான் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்போம் என்று தான் சொல்லி வருகிறேன். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தேர்தலை கொண்டு வருவது ஒரு முறை. சுயநலத்துக்காக ஓராண்டாக தமிழகத்தில் நடத்துகின்ற துரோக நடவடிக்கைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வந்தால் என்னவென்று பார்ப்போம்.

கேள்வி:- தமிழக அரசியலின் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் தலைக்குனிவை ஏற்படுத்தி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறாரே?

பதில்:- அரசியல் என்பதை அவர் எவ்வாறு ஒப்பிட்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் இருக்கும் துரோக அரசாங்கத்தால் தமிழக அரசியலே வடக்கு நோக்கி கைகட்டி நிற்பதாக அவர் சொல்லி இருந்தால் அது சரியாக இருக்கும்.

மக்கள் தான் எஜமானர்கள்

கேள்வி:- ஜனநாயகம் என்ற பெயரிலே சொந்த நாட்டு மக்களை கொள்ளை அடிப்பதாக ரஜினிகாந்த் குற்றஞ்சாட்டி இருக்கிறாரே?

பதில்:- ஜெயக்குமாருக்கு பதில் சொல்வது போல, இவருக்கும் நான் பதில் சொல்லி கொண்டு இருக்க வேண்டுமா?

கேள்வி:- ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் வாக்காக மாற வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிப்பதற்கும், தேர்தலில் நிற்பதற்கும் எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. மக்கள் தான் தீர்மானிக்க முடியும். இன்னொரு அரசியல் இயக்கத்தில் இருக்கும் நான் சொல்வது நன்றாக இருக்காது. ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு சில கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறது. அடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றிடம் நிரப்பப்பட்டு இருக்கிறதா? என்பதை உணர்த்தும். மக்கள் தான் எஜமானர்கள்.

நன்றாகத் தான் இருக்கிறது

கேள்வி:- ஒட்டுமொத்த அரசியல் சிஸ்டமும் சரி இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறாரே?

பதில்:- சுதந்திரம் பெற்ற பிறகு, ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்பு நன்றாக தான் இருக்கிறது. அதை செயல்படுத்தும் மனிதர்கள் தான் சரியாக இல்லை. ‘சிஸ்டம்’ சரியில்லை என்று சொல்வது மனிதர்களை சொல்கிறாரா? என்று தெரியவில்லை.

கேள்வி:- 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட போவதாக சொல்லி இருக்கிறார். அவர் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- மக்களின் மனநிலையை எளிதில் கணித்துவிட முடியாது. எங்களுடைய லட்சியம் எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதாவின் அரசாங்கத்தை அமைப்போம். இந்த ஆண்டில் சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story