ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி?


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி?
x
தினத்தந்தி 13 Jan 2018 10:00 PM GMT (Updated: 13 Jan 2018 7:54 PM GMT)

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி? என்ற மாதிரி போட்டிகளை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான இறுதி தேர்வான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி? என்ற மாதிரி போட்டிகளை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது.

சைதை துரைசாமியை தலைவராக கொண்டு இயங்கும் மனிதநேய மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு வகையான மத்திய-மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

2017-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு முதல்நிலை தேர்வு முடிந்து, முதன்மை தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. மெயின் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனி இறுதியாக நேர்முகத் தேர்வு நடக்கும்.

நேர்முகத் தேர்வுக்கு மனிதநேய மையத்தில் பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசமாக முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்படும் மாதிரி நேர்முகத் தேர்வுகள், மனோதத்துவ நிபுணர்களை வைத்து நேர்முகத் தேர்வுக்கு எப்படி முறையாக செல்வது என்பது பற்றியும் பயிற்சி அளித்து வருகிறது. மாணவர்கள் கலந்துகொண்ட மாதிரி நேர்முகத் தேர்வினை வீடியோ படம்பிடித்து அவர்கள் சுயதிருத்தம் செய்துகொள்ள ஏதுவாக அவர்களிடம் ஒரு பிரதி வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 7 முறை மாதிரி நேர்முகத் தேர்வை சந்திக்க ஏற்பாடுகள் செய்வதால்தான், மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள், ஒவ்வொரு முறையும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுகிறார்கள்.

மாணவர்களுக்கு மாதிரி நேர்முகத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. மாதிரி நேர்முகத் தேர்வை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ். அதிகாரிகளான ஆர்.பூர்ணலிங்கம், ஏ.எக்ஸ்.அலெக்சாண்டர், எம்.அபுல்ஹாசன், எஸ்.நகல்சாமி, எஸ்.எஸ்.ஜவஹர் ஆகியோர் நடத்தினார்கள்.

2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்கள், மனிதநேய மையத்தில் நடைபெற்று வரும் இலவச நேர்காணலில் கலந்துகொண்டு பயிற்சி பெற, நேரிலோ அல்லது இணையதளம் ( www.saidais.com ) மூலமாகவோ பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்டவாறு மனிதநேய மைய பயிற்சி இயக்குனர் எம்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story