நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரதம் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு


நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரதம் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-16T10:32:11+05:30)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கவிஞர் வைரமுத்து இன்று மாலைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி தவறாக பேசியதாகக் கூறி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கவிஞர் வைரமுத்து இன்று மாலைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்து உள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள ராமானுஜ ஜீயர், ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர், காஞ்சீபுரம் ஸ்ரீ உ.வே.அழகிய மணவாள ஜீயர், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ஸ ராமானுஜ ஜீயர், இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன், அகில உலக விஸ்வ இந்து பரிஷத் கவுரவத் தலைவர் வேதாந்தம், அனந்தபத்மநாபாச்சாரியார், வெங்கட கிருஷ்ணன், ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி, நடிகர்கள் விசு, எஸ்.வி.சேகர், நடிகை குட்டி பத்மினி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள ராமானுஜ ஜீயர் பேசியதாவது:-

கெடு

நமது மனங்களை கொதிக்க வைத்துவிட்டார் வைரமுத்து. உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் தாய், தந்தை ஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார். அவர்கள் நம் அனைவரையும் குழந்தைகளாகவே பார்க்கிறார்கள். அப்பேற்பட்ட ஆண்டாள் நாச்சியார் குறித்து கவிஞர் வைரமுத்து தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் கெடு விதித்து உள்ளோம்.

அதன்படி, நாளை(இன்று) மாலைக்குள் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கடல் அலை எப்படி பொங்கி எழுகிறதோ? அதே போன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்துக்கள் எழுச்சியுடன் பொங்கி எழுந்து ஆண்டாள் காலடியில் வைரமுத்துவை விழ வைப்போம்.

சாகும் வரை உண்ணாவிரதம்

அவர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் புதன்கிழமை (நாளை) முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறும்போது, வைரமுத்து ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வந்து விழுந்து வணங்கினால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம். அவருக்கு தைரியம் இருந்தால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை பேசி பார்க்கட்டும். அவர்கள் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருப்பதை வரவேற்கிறேன். அதே போன்று இந்துக்களும் பயத்தை ஏற்படுத்துவோம்” என்று கூறினார். 

Next Story