30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்


30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
x
தினத்தந்தி 16 Jan 2018 10:00 PM GMT (Updated: 16 Jan 2018 8:57 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 3 மாத குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் காப்புக் காடு. நேற்று முன்தினம் இரவு இந்த காட்டில் இருந்து 30 யானைகள் உணவுக்காக வெளியே வந்தன. அவை அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தின.

பின்னர் அந்த யானைகள் நேற்று அதிகாலை ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி ஊராட்சி பாவாடரப்பட்டி பக்கமாக ஊடேதுர்க்கம் காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த யானைகளுடன் வந்த 3 மாத பெண் குட்டி யானை ஒன்று, எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த தண்ணீர் இல்லாத 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

வலை மூலம் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும், கிராம மக்களும் அங்கு திரண்டனர். அப்போது வலையுடன் கீழே இறங்கி யானை குட்டியை அதில் ஏற்றி மேலே கொண்டுவருவது என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

முதற்கட்டமாக சோர்வாக இருந்த குட்டி யானைக்கு பழம், கரும்புகள், தென்னை ஓலை போன்றவை கிணற்றுக்குள் போடப்பட்டது. அவற்றை குட்டி யானை சாப்பிட்டது. பின்னர் வனத்துறையினர் கிணற்றுக்குள் வலையுடன் இறங்கினார்கள். பின்னர் யானையை வலையில் ஏற்றினார்கள்.

உடனே மேலே இருந்தவர் கள் கயிறு மூலமாக வலையை தூக்கி குட்டி யானையை மேலே கொண்டு வந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை காலை 11 மணி அளவில் மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த யானை காட்டில் விடப்பட்டது. 

Next Story