மானியம் ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


மானியம் ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:00 PM GMT (Updated: 17 Jan 2018 10:16 PM GMT)

ஹஜ் பயணிகளுக்கான மானியம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான மானியங்கள் பலவற்றை ஏதேனுமொரு சாக்கு போக்கு சொல்லி, சிறிது சிறிதாக ரத்து செய்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது ஹஜ் பயணிகளுக்கான பயண மானியத்தையும் ரத்து செய்துள்ள பிற்போக்கு நட வடிக்கைக்கு தி.மு.க. கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அப்தாப் அலாம், ரஞ்சன பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சட்டத்தின்படி ஹஜ் மானியம் சட்டபூர்வமானது என்று கூறியிருந்ததை மத்திய பா.ஜ.க. அரசு, வசதியாக மறந்து விட்டதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த காவிரி மேலாண்மை வாரியம், நாட்டு மக்களின் நலன் சார்ந்த ஆதார் உள்ளிட்ட வழக்குகளில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை அமல்படுத்துவதில் முரண்பாடு கொண்டு, அமைதி காக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, ஹஜ் மானியத்தை ரத்து செய்வதில் மட்டும் இத்தனை தீவிரமாக, விரைந்து நடவடிக்கைகள் எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்தது மட்டுமல்ல, மானியம் அரசியல் சட்டபூர்வமானது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதை மீறிய செயல் என்றே தி.மு.க. கருதுகிறது.

திரும்ப பெற வேண்டும்

வளர்ச்சி, கூட்டுறவு கூட்டாட்சி, ஊழல் ஒழிப்பு என்று மக்களிடம் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இன்றைக்கு ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்து, நாட்டை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாதையிலிருந்து பின்னடைவை உண்டாக்கும் வேறு திசையில் அழைத்துச் செல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆகவே, ஹஜ் பயணிகளுக்கு மானியம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் தெகலான்பாகவி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Next Story