மானிய விலையில் பெண்களுக்கு ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


மானிய விலையில் பெண்களுக்கு ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Feb 2018 12:15 AM GMT (Updated: 24 Feb 2018 5:48 PM GMT)

மானிய விலையில் பெண்களுக்கு ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். #PMModi

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை சென்னை வந்தார். 

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தனி விமானத்தில் அவர் வந்தார். 

சென்னை விமான நிலையத்தில் வழங்கப்பட்ட வரவேற்புக்கு பிறகு அங்கு இருந்து கடற்கரை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரு ஹெலிகாப்டரிலும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு ஹெலிகாப்டரிலும் மாலை புறப்பட்டனர். 

பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை 5.45 மணிக்கு வந்திறங்கினர். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கலைவாணர் அரங்கத்துக்கு வந்தனர். வழிநெடுக மக்கள் கூடி நின்று பிரதமர் நரேந்திர மோடியை கையசைத்து வரவேற்றனர்.

கலைவாணர் அரங்க வளாகத்திற்கு மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அங்கு அவரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

நுழைவு வாயில் அருகே ஜெயலலிதாவின் 70–வது பிறந்த நாளையொட்டி 70 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்காக தனி பந்தல் போடப்பட்டு இருந்து. அங்கு மகிழம் மரக் கன்றை பிரதமர் நரேந்திரமோடி நட்டு, மரக்கன்று நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

பின்னர் கலைவாணர் அரங்க வளாகத்தில் போடப்பட்டிருந்த விழா மேடைக்கு மாலை 6.05 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். மேடையின் முன்னால் வந்து நின்று அனைவருக்கும் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பதிலுக்கு மக்களும் கையசைத்தும் கைதட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தினார். மேலும், தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட சந்தனத்தால் ஆன கிருஷ்ணர் சிலையை நினைவுப் பரிசாக பிரதமருக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கினார். பின்னர் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  வரவேற்புரை ஆற்றினார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதன்மை உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து உழைக்கு மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இருசக்கர வாகனங்களை பெறுவதற்காக ஆயிரம் உழைக்கும் மகளிர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

அந்தத் திட்டத்தின் தொடக் கமாக வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மதுமாதா, தீபா, ஹர்சானா, தங்கமலர், கவிதா ஆகிய 5 பெண்களுக்கும் விழா மேடையில் இருசக்கர வாகனத்தையும், அதற்கான சாவி மற்றும் ஆர்.சி. புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

பின்னர் தனது விழாப் பேருரையை மாலை 6.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். 15 நிமிடம் அவர் பேச்சு நீடித்தது. ஜெயலலிதாவின் பெயரை அவர் குறிப்பிடும்போது, பொதுமக்கள் பலமாக கைகளைத் தட்டி ஒலி எழுப்பினர்.

பிரதமர் நரேந்திரமோடி தனது பேச்சின் தொடக்கத்தில் அந்தந்த மாநில மொழியில் பேசுவது வழக்கம். இங்கு அவர் பேசியதாவது:–

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழ் மண்ணிற்கும் மொழிக்கும் பாரம்பரியத்திற்கும் உங்களுக் கும் நான் தலை வணங்குகிறேன்.

‘‘எட்டுமறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’’ என்று சொன்ன மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன். பெண்ணே நீ மகத்தானவள்’’

இவ்வாறு அவர் தமிழில் பேசினார்.

உடனே அங்கிருந்த மக்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். மேலும் அவர் பேசியதாவது:–

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். ஜெயலலிதா தற்போது எங்கிருந்தாலும் சரி, உங்கள் முகத்தில் இருக்கும் சந்தோ‌ஷத்தைப் பார்த்து அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார் என்பது உறுதி.

இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்களில் ஒன்றான, உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாகும்.

மேலும், அவரது 70–வது பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும் இந்த ஆண்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் எனக்கு சொல்லப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களுமே பெண்களை மேம்படுத்துவதோடு, இயற்கையை பாதுகாக்கும் திட்டமாகவும் அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டசபை சபாநாயகர் ப.தனபால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விழா மேடையில் வீற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அந்தக் கட்சி நிர்வாகிகள், உழைக்கும் மகளிர் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அரசு டாக்டர்கள் சுதா சேஷையன், சுமன் ஸ்ரீராமன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். 

கலைவாணர் அரங்கில் அம்மா மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி கவர்னர் மாளிகைக்கு சென்று அங்கு தங்கினார். 

முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சால்வை அணிவித்து மலர் மற்றும் புத்தகம் வழங்கியும் வரவேற்றனர். 

அதுபோல ராணுவ அதிகாரி லெப்டினண்ட் கர்னல் ஆனந்த், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, எம்.பி.க்கள் மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர். 

இன்று காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி பின்னர் ஆரோவில்லில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். பின்னர் மாலை 4.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சூரத்திற்கு தனி விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். 

Next Story