நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட தயாராக வேண்டும்


நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட தயாராக வேண்டும்
x
தினத்தந்தி 9 April 2018 4:45 AM IST (Updated: 9 April 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட தயாராக வேண்டும் என்று நடைபயணத்தின் போது வைகோ பேசினார்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31-ந் தேதி மதுரையில் இருந்து விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கினார்.

8-வது நாளான நேற்று உத்தமபாளையம் அருகே காலை 6.30 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வைகோ நடந்து வந்தார். வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:-

நியூட்ரினோ ஆய்வு மையத்தில் பாறைகளை தகர்க்கும் போது, முல்லைப்பெரியாறு அணை, இடுக்கி அணையில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்படும். தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, மணலாறு, வெண்ணியாறு மற்றும் வைகை அணை உள்ளிட்ட அணைகள் பாதிக்கப்படும்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தில் அணுக்கழிவுகளை கொட்டுவது தான் மத்திய அரசின் திட்டம் என்பது தொடக்கத்தில் தந்த அறிக்கையில் உள்ளது. இந்த மையத்தில் இருந்து உலகின் எந்த பகுதியிலும் உள்ள அணுகுண்டு, நைட்ரஜன் குண்டு உள்ளிட்ட அணு ஆயுதங்களை செயல் இழக்கவோ அல்லது வெடிக்க செய்யவோ முடியும்.

உலகில் அணு ஆயுத போர் மூளும் நிலை ஏற்பட்டால் அம்பரப்பர் மலை மீது தான் முதல் அணு குண்டு வீசப்படும். இந்த ஆய்வு மையத்துக்கு, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் இதற்கு அனுமதி அளித்துவிடாதீர்கள்.

மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக இல்லாவிட்டால் நாம் கடினமான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதற்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் இளைஞர்கள் தயாராக வேண்டும். துப்பாக்கி சூடு நடைபெற்றாலும் பின்வாங்காமல் போராட வேண்டும். இந்த யுத்த களத்தில் முதல் ஆளாக நான் இருப்பேன். என்னை சுட்ட பிறகு தான் மற்றவர்களை சுட முடியும். தாய் மண்ணை காக்கவும், இனி வரும் சந்ததிகளை பாதுகாக்கவும் இளைஞர்கள் அணி திரளவேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

வைகோவுடன் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மாநில தொண்டர்படை செயலாளர் பாஸ்கர சேதுபதி, தேனி மாவட்ட செயலாளர் சந்திரன் உள்பட ஏராளமான தொண்டர்கள் நடந்து சென்றனர்.

‘தினத்தந்தி’க்கு பாராட்டு


‘தினத்தந்தி’யில் நியூட்ரினோ குறித்து ஒருபக்க அளவில் கட்டுரை நேற்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. தேவையான நேரத்தில் பொதுமக்களுக்கு இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரையில் விரிவாக கூறப்பட்டு இருந்தது, பாராட்டுக்குரியது என்று வைகோ தெரிவித்தார். 

Next Story