4-வது நாள் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
திருவாரூர் மாவட்டம் கமலாலயம் பகுதியில் இருந்து 4-வது நாள் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். #MKStalin #CauveryIssue #DMK
தஞ்சை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ‘ஸ்கீம்’ என்ற பெயரில் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறது என்று கொட்டும் மழையில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7–ந் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். 2–வது நாள் நேற்று முன்தினம் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது.
மூன்றாவது நாளான நேற்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்பேட்டையில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயண கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்கினார். அவருடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பழகன், கோவி.செழியன் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயணத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மெலட்டூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, இரும்புதலை, சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அருந்தவபுரம், புளியக்குடி, புத்தூர், அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டார். புத்தூரில் அவர் விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது மழை கொட்டியது. கொட்டும் மழையில் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது:–
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தி, முழு அடைப்பு போராட்டத்தையும் முடித்து, தற்போது காவிரி உரிமை மீட்புப் பயணத்தை 2 கட்டங்களாக நடத்துகிறோம்.
முதல்கட்ட பயணத்தை திருச்சியில் தொடங்கி கடந்த இரு நாட்களாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். காவிரி உரிமை மீட்பு பயணத்தினால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மூலமாக, உணர்ச்சி வாயிலாக நாம் எதிர்பார்த்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும் என்பது நமக்கு தெரிகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென இறுதியான, உறுதியான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு அதில் சதி செய்து, ’தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்றால் என்ன?’ என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று அகராதியை எடுத்துப் பார்த்தாலே தெரியும்.
எனவே அதை அவர்கள் புரிந்து கொண்டு இருந்தாலும் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூங்குபவர்களை எளிதில் எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவது போல நாடகம் நடத்தி கொண்டிருப்பவர்களை எழுப்ப முடியாது. அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிபணிந்து எடுபிடி வேலை செய்பவராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
“ஜாடிக்கு ஏற்ற மூடி’’ என்று ஒரு முதுமொழி உண்டு. இப்போது “மோடிக்கேற்ற எடப்பாடி’’ என்ற புதுமொழி உருவாகியிருக்கிறது. இப்படி மத்தியில் இருக்கிற ஆட்சியும், மாநிலத்தில் உள்ள ஆட்சியும் காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை தொடர்ந்து இழைத்து வருகின்றன. அதிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்கு பல போராட்ட களங்களை வகுத்து வருகிறோம்.
இவற்றில் எதிர் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்பட பலரும் பங்கேற்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்கட்சிகளாக இருக்கின்ற 9 கட்சிகள் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தில், கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் பங்கேற்று இருப்பதை கண்டு நான் உள்ளபடியே பெருமையடைகிறேன். எங்களுடைய பயணத்துக்கு ஊக்கமும், உற்சாகமும் வழங்குவதாக இது அமைந்திருக்கிறது.
பிரதமர் மோடி வருகிற 12–ந் தேதி தமிழகத்துக்கு வருகிற நேரத்தில், அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவதென எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து இருக்கிறோம். சென்னையையொட்டி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கும் நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம். அதேபோல, தமிழ்நாடு ஒரு துக்க நாள் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதை வெளிப்படுத்தும் வகையில் அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது நாம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று நாங்கள் அறிவித்தோம். அதுமட்டுமல்ல, அனைவரும் கருப்பு சட்டை, கருப்பு புடவை அணிந்து நம்முடைய உணர்வை வெளிப்படுத்த வேண்டும். அன்று தமிழ்நாடே கருப்பு தினமாக காட்சியளிக்க வேண்டும். எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு உங்களுடைய நல்லாதரவை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று (10-ந் தேதி) 4-வது நாள் பயணத்தை திருவாரூரில் தொடங்கினார்.காலை 9 மணியளவில் திருவாரூர் கீழவீதியில் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, மதிவாணன் எம்.எல்.ஏ, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருவாரூர் மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, துர்காலயா தெரு வழியாக சென்று காட்டூர், பவித்ரமாணிக்கம், திருக்கண்ணமங்கை, குழிக்கரை, தேவர்கண்டநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
பின்னர் அம்மையப்பன் கிராமத்தில் விவசாயிகள், மாணவர்களை சந்தித்து அவர் பேசுகிறார். இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கமலாபுரத்தில் பயணத்தை தொடங்கி கூத்தாநல்லூர், மன்னார்குடி, கோட்டூர் வழியாக திருத்துறைப்பூண்டியில் பயணத்தை நிறைவு செய்கிறார். பின்னர் மாலை யில் கோட்டூர், மன்னார் குடி வழியாக திருத்துறைப் பூண்டியில் பயணம்
நிறைவடைகிறது.
இதற்கிடையே காவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவினர் அரியலூரில் இருந்து தொடங்கினர். இன்று காலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருவையாறில் மீட்பு பயணத்தை தொடங்கு கின்றனர். தொடர்ந்து கண்டியூர், மாத்தூர், அய்யம்பேட்டைக்கு செல்கின்றனர். மாலையில் பாபநாசம், தாராசுரம், வழியாக சென்று கும்பகோணத்தில் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
Related Tags :
Next Story