தமிழகத்தில் கோமாளி ஆட்சி-முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடந்து வருகிறது- நாகையில் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் கோமாளி ஆட்சி-முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடந்து வருகிறது-  நாகையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 April 2018 2:18 PM IST (Updated: 11 April 2018 2:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போராட்டத்தில் திரண்ட பொதுமக்களை பார்க்கும் போது காவிரி நீர் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது நாகையில் மு.க.ஸ்டாலின் பேசினார். #CauveryProtest #MKStalin #DMK

தஞ்சாவூர், 

டெல்டா பகுதிகளில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தி வருகிறார். இன்று 5-வது நாளாக நாகை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். நாகை மாவட்டம் பரவையில்  இன்று காலை  பயணம் தொடங்கினார்.

நாகை செம்பியன்மா தேவி பகுதியில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின்  பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நாங்கள் கடந்த 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினோம். அது வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து  காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி இன்று 5-வது நாளாக நடந்து வருகிறது.

இந்த காவிரி நடை பயணத்தில் எங்களை விட தமிழக மக்கள் மத்தியில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. 

எங்களது பயணத்தில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கலந்து கொண்டனர். கலைஞரின் மகன் என்ற கம்பீரத்துடன் காவிரி மீட்பு போராட்டத்தில் பங்கேற்றத்தில் பெருமை கொள்கிறேன்.

தமிழக அரசு காவிரி விவகாரத்தில் ஏதாவது ஆலோசனைகளை தெரிவித்து இருக்கலாம். தமிழகத்தில் கோமாளி ஆட்சி-முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடந்து வருகிறது. இது வெட்கக்கேடான விஷயம்.

விளையாட்டு போட் டிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்கள், தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி போராட்டம் நடந்து வரும் நிலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுமாறு வலியுறுத்தினோம். வீரர்களோ, பார்வையாளர்களோ கருப்பு சட்டையோ, பேட்ஜோ அணியவிடாமல் கெடுபிடியுடன் நடந்து கொண்டது வேதனை யளிக்கிறது. ஏற்கனவே இதே கிரிக்கெட் வீரர்கள் எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவற்றின் விழிப்புணர்வுக்காக கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி உள்ளனர்.

நேற்று இயக்குனர் பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தலைவர்கள் நடத்திய போராட்டத்தில் மக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். இதில் போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. 

நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்ட வேண்டும். அனைவரும் கருப்பு சட்டை அல்லது பேட்ஜ் அணிய வேண்டும்.  சென்னை வரும் மோடிக்கு நாளைய தினம் துக்க தினமாக தெரிய வேண்டும்.

மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்ததால் போலீசார் கைது நடவடிக்கை எங்களது மீது பாயும். என் தோழமை கட்சியினரையும் கைது செய்வார்கள். எத்தனை பேரை நீங்கள் கைது செய்வீர்கள். நாங்கள் கைது செய்யப்பட்டாலும், பொதுமக்களே கருப்பு கொடி காட்டுவார்கள். அந்த நிலை  தான் தமிழகத்தில் நிலவி உள்ளது. காவிரி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

நாளை கடலூரில் இருந்து 1000 வாகனங்களில் பேரணியாக சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். சென்னையில் நேற்று போராட்டத்துக்கு திரண்ட பொதுமக்களை பார்க்கும் போது நிச்சயமாக காவிரி நீரை நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து  பாப்பா கோவில், சிக்கல், காரைக்கால், பொறையார், செம்பனார் கோவில் ஆகிய பகுதிகளின் வழியே சென்று மயிலாடுதுறையில்  இன்று இரவு  நிறைவு செய்கிறார்.

Next Story