‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமையுங்கள்’ பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்குமாறு கோரி, பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறிய மத்திய அரசு, ‘ஸ்கீம்’ என்பது பற்றி விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் செயல்திட்டம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
அதேசமயம், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ் நிலையில், சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காகவும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், பிரதமர் மோடி நேற்று காலை சென்னை வந்தார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழியனுப்பி வைத்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனே அமைக்குமாறு கோரி பிரதமரிடம் அவர் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக் கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-2-2018 அன்று 6 வார காலத்துக்குள் ஒரு செயல் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று தனது தீர்ப்பில் உத்தரவிட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
மேலும், கடந்த 9-4-2018 அன்று, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்போடு உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக தெரிவித்து இருக்கிறது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முழுமையான அம்சமாக இருக்கிறது.
காவிரி தண்ணீரையே நம்பி இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள டெல்டா பகுதி விவசாயிகள், 1-6-2018 அன்று தொடங்கும் அடுத்த நீர்ப்பாசன பருவ காலத்தில் தங்கள் விவசாய பணிகளை தொடங்கும் வகையில் இந்த செயல்பாட்டு அமைப்பு மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுவிடும் என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
எனவே, காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை திறம்பட செயல்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story