சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தயாரித்த ரேஸ் கார் சர்வதேச போட்டியில் பங்கேற்பு இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பேட்டி
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தயாரித்த ரேஸ் கார் ஜெர்மனி நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்பதாக ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் புதுமையான படைப்புகளுக்கு ஒரு மையம் 2008-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்த மையத்தில் எங்கள் ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கும் படிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த மையத்தை முழுக்க மாணவர்களே இயக்கி வருகிறார்கள். பேராசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.
இப்போது அந்த மையத்தில் மாணவர்கள் ரேஸ் கார், மார்ஸ் ரோவர், தானியங்கி வாகனம் ஆகிய 3 முக்கியம் வாய்ந்தவற்றை படைத்துள்ளனர். அவை மூன்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
மையத்தின் மாணவர் செயல் தலைவர் எஸ்.ராகவ் கூறியதாவது:-
ரப்தர் அணி ரூ.15 லட்சம் செலவில் ரேஸ் காரை உருவாக்கியுள்ளது. ஜெர்மனி நாட்டில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டியில் இது பங்கேற்கிறது. உலகளவில் 33 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இந்தியாவில் இருந்து சென்னை ஐ.ஐ.டி. அணி மட்டுமே கலந்துகொள்கிறது.
அன்வேஷக் அணி ‘மார்ஸ் ரோவர்’ என்ற படைப்பை உருவாக்கி உள்ளது. இந்த மார்ஸ் ரோவர் அமெரிக்காவில் உத்தா ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை மாதம் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்கிறது. செவ்வாய் கிரகம் போல அங்கு உருவாக்கப்படும் பகுதியில் மார்ஸ் ரோவர் இயக்கப்படும்.
அபியான் என்ற அணி ரோபோடிக் தொழில்நுட்பத்தில் தானியங்கி வாகனத்தை உருவாக்கி உள்ளது. இந்த வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஓக்லாண்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்துகொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேராசிரியர்கள் எஸ்.எம்.சிவகுமார், பி.ரவீந்திரன், ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story