வன்கொடுமை சட்டம்: மத்திய அரசு மேல் முறையீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின்


வன்கொடுமை சட்டம்: மத்திய அரசு மேல் முறையீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 April 2018 1:05 PM IST (Updated: 16 April 2018 1:05 PM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை சட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin #SupremeCourt

சென்னை

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பாக 20.3.2018 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்து பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமடைந்தார்கள்.

இதையடுத்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 6-ந்தேதி அன்று நடந்தது. இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

வடமாநிலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, தலித் மக்கள் படுகொலை உள்ளிட்ட அரசு வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையிலும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் 16-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கனிமெழி, திருமாவளவன், பேராசிரியர் காதர்மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முன்னணி பொறுப்பாளர்களும் , தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் பேசியதாவது:-

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்க்க வேண்டும் எனக் கூறினார்.

Next Story