மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை விவகாரம்; சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்


மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை விவகாரம்; சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்:  மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 April 2018 7:10 PM IST (Updated: 16 April 2018 7:10 PM IST)
t-max-icont-min-icon

மாணவிகளை தவறான வழியில் அழைத்து செல்ல பேராசிரியை முயற்சித்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin

சென்னை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்த நிலையில், மாணவிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

அருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபாலிடம் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை கல்லூரி நிர்வாகமும், மாதர் சங்கமும் கொடுத்துள்ளது. புகார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தனபால் கூறினார்.

இந்த நிலையில், பேராசிரியையே மாணவிகளை தவறான வழியில் அழைத்து செல்ல முயற்சித்தது அதிர்ச்சி அளிக்கிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

எந்த மேலிடத்துக்காக இந்த ஈனச்செயலில் ஈடுபட்டார்? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.  பேராசிரியையிடம் விசாரித்து குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியையே மாணவிகளை தவறான வழியில் அழைத்து செல்ல முயற்சித்தது கண்டனத்திற்குரியது.  மாணவிகளின் வாழ்க்கையை நாசம் ஆக்க பேராசிரியை முயற்சித்துள்ளார்.  இதுபற்றி உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story