கவர்னர் அறிவித்துள்ள விசாரணை குழுவால் பாலியல் ஊழலை மூடிமறைக்க முயற்சி டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
கவர்னர் அறிவித்துள்ள விசாரணை குழுவால் பாலியல் ஊழலை மூடிமறைக்க முயற்சி நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியில் உள்ள சிலபெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு தனியார் கல்லூரி மாணவிகளை பலியாக்க உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி முயன்ற விவகாரம் வெளியானதுமே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. தான் முதன்முதலில் வலியுறுத்தியது. பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்வதுடன், இந்த கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பா.ம.க. வலியுறுத்தியது.இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் செல்லத்துரையும் அறிவித்துள்ளனர். இவையும் பாலியல் ஊழலை மூடிமறைக்கும் முயற்சி தான்.
கவர்னர் புரோகித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதுவும் கல்லூரி நிர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ, விதிமீறலோ நடந்தால் மட்டுமே கல்லூரி கல்வி இயக்ககம் தலையிட முடியும்.ஆனால், இது குற்றவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் அதுதொடர்பாக விசாரிக்கவும், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல நிர்மலாதேவியுடன் செல்போனில் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்த விவரங்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.