அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல் போலீசார் அதிர்ச்சி
அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் என நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடலை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். #Nirmaladevi
விருதுநகர்,
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று அதிரடி விசாரணை தொடங்கினார்கள்.
பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஏற்கனவே விசாரித்த அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில், மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரியை சந்தித்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர்.
பேராசிரியை நிர்மலா தேவி கொடுத்துள்ள வாக்கு மூலம், அவரிடம் கைப் பற்றப்பட்ட 3 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் மற்றும் மாணவிகளிடம் பேசும் செல் போன் பேச்சுப்பதிவு ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.
ஆவணங்கள் குறித்து, விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பேராசிரியை நிர்மலா தேவியை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
7 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து உள்ளனர். டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் தலைமையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில், நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் சாட்டிங்கைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்க, நிர்மலா தேவியை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "நிர்மலா தேவியின் போன் உரையாடல், வாட்ஸ்அப் சாட்டிங் ஆகியவைகுறித்து அவரிடம் விசாரிக்க முடிவுசெய்துள்ளோம். சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவிகளுடன் நிர்மலா தேவி மார்ச் முதல் வாரத்தில் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதில், 'பிஎன் மேடம் 2' என்று நிர்மலா தேவியின் பெயரை மாணவி ஒருவர் தன்னுடைய செல்போனில் பதிவுசெய்துள்ளார்.
அதில் பல தகவல்கள் இருந்தாலும், வழக்குத் தேவையானவற்றை மட்டும் நாங்கள் சேகரித்துள்ளோம். ''கண்ணுங்களா டீம் பார்ம் பண்ணுவோமா'' என்று ஆரம்பிக்கிறது அந்த வாட்ஸ்அப் சாட்டிங். அதற்கு மாணவி, ''மேடம் வெளியில் போகும்போதுகூட நீங்கள் வாரீங்களா, அமைதியா சாதிப்போம்'' என்று பதில் சொல்கிறார். அதன்பிறகு நடக்கும் உரையாடல்கள்தான். இந்த வழக்குக்கு முக்கிய ஆவணமாக உள்ளது.
''வெற்றிக்கு திறமை மட்டும் போதாது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்திச்சாலித்தனமாக செயல்பட வேண்டும். நான் சொல்வது உங்களுக்குப் புரிந்தால், குட் மார்னிங் என்று ஆங்கிலத்தில் கேப்பிட்டலில் எனக்கு மெஸேஜ் அனுப்பவும். படிப்பிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு நான் வழிகாட்டுவேன்'' என்று நிர்மலா தேவி உரையாடுகிறார். அதோடு, ''வாட்ஸ்அப்பில் டி.பி-யில் உங்களின் அழகான புகைப்படங்களை வையுங்கள்'' என்றும் கூறுகிறார். இதற்கு மாணவிகள், எதிர்த்து பதிலளித்துள்ளனர்.
மேலும், ''அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம்'' என்றும் நிர்மலா தேவி குறிப்பிடுகிறார். மாணவிகளுக்கும் நிர்மலா தேவிக்கும் நடந்த இந்த வாட்ஸ்அப் சாட்டிங்கில், பேராசிரியையின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு எதிர்ப்பைக் காட்டிய மாணவிகளிடம், ''இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்'' என்றும் அட்வைஸ் செய்துள்ளார். கடைசியாக, ''யோசி... யோசி'' என்று மீண்டும் மாணவிகளிடம் சொல்கிறார். இதுபோல பல வாட்ஸ்அப் உரையாடல்கள் எங்களிடம் உள்ளன. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்த உள்ளோம். கல்லூரி நிர்வாகத்திடமும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடமும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். 'கண்ணுங்களா டீம் பார்ம் பண்ணுவோமா' என்று நிர்மலா தேவி வாட்ஸ் அப்பில் சொல்லியிருப்பதால், அந்த டீம் குறித்தும் விசாரிக்கப்படும்" என்றார்.
இதற்கிடையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் கூறுகையில், "நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் பேசியதாக வெளியான ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்" என்றார்.
Related Tags :
Next Story