தமிழ்நாட்டில் இனியாவது லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி


தமிழ்நாட்டில் இனியாவது லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 6:42 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற தமிழ்நாட்டில் இனியாவது லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்ததுடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ்நாடு அரசு லோக் ஆயுக்தா அமைக்காததை நீதிமன்றம் கண்டித்து இருக்கிறதே?.

பதில்:- தாங்கள் செய்திருக்கும் ஊழல்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தினால் இந்த அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவராமல் இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து, சட்டமன்றத்தில் நான் பலமுறை கேள்வியெழுப்பிய போதும், லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று இதுவரை சொல்லவில்லை. இதை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனியாவது லோக் ஆயுக்தா கொண்டு வந்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து திசை திருப்ப நிர்மலா தேவி விவகாரம் போன்ற பல பிரச்சினைகள் எழுப்பப்படுகிறதா?.

பதில்:- அப்படியொரு சந்தேகமும் இருக்கிறது. எச்.ராஜாவின் அநாகரிகமான பதிவு, கவர்னருடைய நடவடிக்கைகள் ஆகியவற்றை எல்லாம் பார்க்கின்றபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் எண்ணத்தில் இவையெல்லாம் நடப்பதாகவே கருதுகிறேன்.

கேள்வி:- கவர்னரை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடருமா?.

பதில்:- மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், அவரை திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறோம். அதற்காக எங்களுடைய போராட்டம் தொடரும்.

கேள்வி:- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருக்கிறதே?.

பதில்:- பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் எந்தளவுக்கு தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள்? இதுகுறித்து எல்லாம் உண்மைகள் வெளிவர வேண்டும் என்றால், ஐகோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையை அரசு அறிவித்துள்ளது. அறிவித்த 2 நாட்களுக்குள், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யை அவசர அவசரமாக மாற்றியிருக்கின்றனர். எங்களுக்கு வந்திருக்கும் செய்திகளின்படி, அவர் மிகுந்த நேர்மையானவர், உண்மையை கண்டறிந்து வெளிப்படுத்தக்கூடிய திறமையான போலீஸ் அதிகாரி, என்று அறிகிறோம். எனவே, உண்மைகள் வெளியாகிவிடுமே என்ற அச்சத்திலும், சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியிலும் எடப்பாடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படிப்பட்டவர்கள் சட்டம் - ஒழுங்கு பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் ஏன் கவலைப்படுகிறார்கள்?

கேள்வி:- நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் அமைத்து இன்று தொடங்கும் விசாரணை ஆணையத்தில் நியாயம் கிடைக்குமா?.

பதில்:- நிச்சயமாக கிடைக்காது. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களே விசாரணைக்கு உத்தரவிடுவது வேடிக்கையானது. எனவே, உண்மையான விசாரணை நடந்து, நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், ஐகோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story