சென்னையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தி.மு.க.வினர் கருப்பு கொடி


சென்னையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தி.மு.க.வினர் கருப்பு கொடி
x
தினத்தந்தி 19 April 2018 9:37 PM GMT (Updated: 19 April 2018 9:37 PM GMT)

சென்னை திருவொற்றியூரில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டினார்கள்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாஸ்கர், வெங்கடகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

அதைதொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-

உயர் பதவியில் இருக்கும் கவர்னர் மன்னிப்பு கேட்டது, அவரது பெருந்தன்மையை காட்டுகின்றது. ஆனால் எதிர்க்கட்சியினர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைத்து அவரை பதவி விலக சொல்வது நியாயமானது அல்ல.

நிர்மலா தேவி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முறையாக நடைபெற வேண்டும். அவரது பின்னணியில் யார், யார்? இருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குற்றச்செயல் அதிர்ச்சி அளிக்கின்றது.

உயர்நீதிமன்றமே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி உள்ளது. தொடர்ந்து பெண் கொலைகள் அரங்கேறி வருகின்றன. தமிழக அரசு சட்டம், ஒழுங்கை காக்க தவறி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

தமிழக அரசியலில் எதிர்கருத்துகள் பதிவிட்டால் கூட நாகரிகமாக இருக்க வேண்டும். தாய்மையையும், பெண்மையையும் அவமதிக்கும் கருத்தை ஆர்.எஸ்.பாரதி பதிவு செய்ததை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இதனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், சகோதரி கனிமொழியும் கண்டிக்கவேண்டும்.

கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றால்தான் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சன்னதி தெரு வழியாக சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு அங்குள்ள தி.மு.க. அலுவலகம் முன் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமையில் திரண்டிருந்த தி.மு.க.வினர், கருப்பு கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கருப்பு கொடிகளை பறித்தனர்.

இதையடுத்து எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்ட தி.மு.க.வினர், தமிழிசை சவுந்தரராஜனின் காரை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story