15 வயது சிறுவனை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய இளம்பெண் கைது


15 வயது சிறுவனை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய இளம்பெண் கைது
x
தினத்தந்தி 20 April 2018 5:44 PM IST (Updated: 20 April 2018 5:44 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே 15 வயது சிறுவனை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய 22 வயது இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அரூர்

அரூர் அருகே வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பாஸ்கரன். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆண்டு இறுதி தேர்வு என்பதால் தீவிரமாக படித்து வந்துள்ளான்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஸ்கரனின் உறவினரின் திருமணம் ஒன்று சிக்களூர் கிராமத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு பாஸ்கரன் சென்றபோது, அவரது உறவினரான 22 வயது வேலம்மாள் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது.

திருமண விழாவில் இருவரும் பேசிக் கொண்டே இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து தினந்தோறும் செல்போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். இதுபோதாதென்று அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாஸ்கரனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட பெற்றோர், இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, வேலம்மாள் பாஸ்கரனை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர் வேலம்மாளை கண்டித்துள்ளனர். அதையும் மீறி இருவரும் யாருக்கும் தெரியாமல் பேசி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாஸ்கரனை காணவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர் பல இடங்களில் மகனை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் கோட்டபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், அந்நேரத்தில் வேலம்மாளும் மாயமாகியிருந்ததால், சந்தேகம் வலுப்பெற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சிறுவனையும், வேலம்மாளையும் பெங்களூரில் பார்த்ததாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாகவும் கிடைத்த தகவலை பெற்றோர் போலீசாருக்கு அளித்தனர்.

பின்னர் பெங்களூர் விரைந்த போலீசார், இருவரையும் பிடித்து கோட்டப்பட்டி காவல்நிலையம் அழைத்து வந்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாஸ்கரன் மீது அளவு கடந்த காதல் ஏற்பட்டுவிட்டதாகவும், அவனை மறக்க முடியாததாலும் கடத்தி சென்று குடும்பம் நடத்தியதாக வேலம்மாள் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் குறிஞ்சிநகர் குழந்தைகள் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அதேபோல, 15 வயது சிறுவனை கடத்தி சென்றதாக வேலம்மாளை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வார்த்தை தமிழகத்தில் தொடர்ந்து நிரூபணமாகி கொண்டே வருகிறது. அதிகரித்துவரும் இது போன்ற குற்ற நிகழ்வுக்கு காரணங்கள் என்ன, பாலியல் குற்றம் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் இவர்களின் மன ஓட்டத்தை சமூக அக்கறையோடு அணுக வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

அத்துடன் சுயஒழுக்கமும், பாவத்தின் வரையறையும் தெரிந்து நடப்பது ஆறறிவு உள்ளவர்களின் அடிப்படை கடமையாகும். குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதற்குமுன், குற்றங்களே நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளான பாலியல் குறித்த விழிப்புணர்வு, தனிமனித ஒழுக்கம் குறித்த இலவச கவுன்சிலிங் போன்றவற்றை அரசு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

Next Story