அர்ச்சகரின் உதவியாளர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது


அர்ச்சகரின் உதவியாளர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 April 2018 2:30 AM IST (Updated: 23 April 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகரின் உதவியாளர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கோவிலுக்கு வந்த 3½ வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

குறிப்பிட்ட சிறுமி தினமும் கோவிலுக்கு செல்வார். திடீரென்று கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். ஏன் கோவிலுக்கு போக மறுக்கிறாய்? என்று அவரது பெற்றோர் கேட்டபோது, “பூசாரி மாமா உதயகுமார் என்னிடம் தவறாக நடக்கிறார். அதனால் நான் கோவிலுக்கு போக மாட்டேன்” என்று சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ‘போக்சோ’ (சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை விசாரித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும், அதனால் இப்போதைக்கு அந்த சட்டத்தின் கீழ் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் உதயகுமார் மீது கற்பழிப்பு குற்றம் சாட்டப்படவில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story