பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப்பேராசிரியர் முருகன் கைது
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப்பேராசிரியர் முருகனை போலீசார் இன்று கைது செய்தனர். #NirmalaDevi
மதுரை
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு அருப்புக்கோட்டை போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் மாஜிஸ்திரேட்டு, நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான உணவு, உடை வழங்கவும் உத்தரவிட்டார்.
இதன்பின்னர் பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கினர்.
விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில், பேராசிரியை நிர்மலா தேவி செல்போனில் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்றும் என்ன பேசினார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பேராசிரியர் நிர்மலா விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உதவிப்பேராசிரியர் முருகனை போலீசார் இன்று கைது செய்தனர். இன்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story