திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன 75 மரங்கள்; வேர்களில் அமிலம் ஊற்றுப்பட்டது என குற்றச்சாட்டு


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன 75 மரங்கள்; வேர்களில் அமிலம் ஊற்றுப்பட்டது என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 April 2018 10:40 AM GMT (Updated: 23 April 2018 10:40 AM GMT)

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருவாரங்களுக்கு முன்னதாக பசுமையாக இருந்த மரங்கள் பட்டுப்போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பெளர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கிரிவல பக்தர்களின் நலன் கருதி ரூ.63 கோடியில் கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், பசுமையான பழங்கால மரங்கள் கிரிவலப் பாதை விரிவாக்கத்துக்காக வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டமும் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து சில நிபந்தனைகளுடன் கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்ய தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. ஒரு மரத்தை கூட வெட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

மலைவல பாதையில் மரங்களை வெட்டாமல் கிரிவல பாதையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பசுமை தீர்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கடந்த இருவாரங்களுக்கு முன்னதாக கிரிவலப்பாதையில் பசுமையாக இருந்த மரங்கள் பட்டுப்போய் காட்சியளிப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மரங்கள் பட்டுப்போவதற்கு அதன் வேர் பகுதிகளில் அமிலம் ஊற்றப்பட்டு உள்ளது என ஆர்வலர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் கிருஷ்ணா குமார் பேசுகையில், “இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது, நாங்கள் மரங்களுக்கு அமிலம் செலுத்தப்பட்டு உள்ளது என சந்தேகிக்கிறோம். 

நாங்கள் பரிசோதனைக்காக சென்னை பரிசோதனை மையத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைத்து உள்ளோம். விரைவில் இதுதொடர்பாக தகவல் தெரியவரும்,” என்றார் என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டு உள்ளது.

பாதையில் கடைகள் வைத்துள்ள வணிகர்களே இதற்கு காரணம் என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது. அமிலம் ஊற்றப்படுவதாக எழுந்த புகாரையடுத்து மலைவல பாதையில் உள்ள அனைத்து மரங்களின் வேர்களில் இருந்தும் மணல் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மரங்களில் வேர்களில் அமிலம் ஊற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சிய கந்தசாமி குறிப்பிட்டார். 
 
இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் பசுமை தீர்ப்பாயம் செல்ல உள்ளோம், நாங்கள் மேலும் இயற்கையை இழக்க விரும்பவில்லை என கிருஷ்ணா குமார் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story