எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ரஜினிகாந்த் பேட்டி


எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 24 April 2018 12:15 AM GMT (Updated: 23 April 2018 10:12 PM GMT)

தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை,

அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- போராட்டத்தில் போலீசார் மீது எதார்த்தமாக நடந்த நிகழ்வை மட்டும் கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று உங்கள் மீது இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறாரே?

பதில்:- போலீசார் சீருடையில் இருக்கிற போது, கை வைப்பது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரம் சட்டம் கையில் இருக்கிறது என்று போலீசாரும் வரம்பு மீறி போகக்கூடாது.

கேள்வி:- குருமூர்த்தி உங்களை சந்தித்தற்கு என்ன காரணம்?

பதில்:- குருமூர்த்தி எனக்கு 25 ஆண்டுகால நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். இதில் தனித்துவம் ஒன்றும் கிடையாது.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த பிறகு, திரைத்துறையில் இருந்த நண்பர்கள் கூட உங்களை விமர்சனம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது.

கேள்வி:- சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறீர்கள். கட்சி பணி எந்த நிலையில் இருக்கிறது. நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பின்னர் அரசியல் கட்சி அறிவிப்பு இருக்குமா?

பதில்:- மன்றத்துக்குள் நடக்கிற விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் தெரியாது. கண்டிப்பாக உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) சொல்லாமல் அதை செய்ய முடியாது. சரியான காலத்தில் அதை தெரிவிப்பேன்.

கேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லையே?

பதில்:- அது ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது உண்மையானால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்து கிடையாது.

கேள்வி:- கவர்னர் பெயரும் அடிபடுகிறதே?

பதில்:- அதை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை.

கேள்வி:- பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை முகநூல், டுவிட்டரில் பதிவு செய்துவிட்டு, அட்மின் பதிவு செய்ததாக மழுப்பலாக கூறி வருகிறார்களே...

பதில்:- தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதில் 2-வது கருத்தே கிடையாது.

கேள்வி:- கனிமொழி தொடர்பாக...

பதில்:- அது பற்றி, நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று சந்தித்து பேசினார். காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தும், தற்போதைய தமிழக அரசியல் நிலை குறித்தும், தொடர்ந்து அரங்கேறி வரும் போராட்டங்கள் குறித்தும் 2 பேரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. சந்திப்பு முடிந்ததும் ஆடிட்டர் குருமூர்த்தியை வீட்டுக்கு வெளியே வந்து ரஜினிகாந்த் வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அங்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு தமிழகத்துக்கு திரும்பும் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் எவ்வாறு செயல்படவேண்டும்? என்று ஆலோசனை வழங்கினார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் ரஜினி கண்டிப்புடன் கூறியதாக கூறப்படுகிறது.

காலா படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றார். அவர் தமிழகம் திரும்பியதும், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இருந்து விமானத்தில் அவர் துபாய் புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் 2 வாரங் கள் தங்கி முழு உடல் பரிசோதனை செய்ய உள்ளார். இந்த பயணத்தின்போது, அமெரிக்கா, கனடாவை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், அவர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார். ரஜினிகாந்து டன் அவரின் மகள் ஐஸ்வர்யா வும் சென்றார்.

இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து பேச ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களோடு ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் மற்றும் நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். ரஜினிகாந்தின் அமெரிக்க பயணம் நிறைவடைந்த பின்னர் கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்றும், கொடி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

Next Story