இன்று நடைபெறுவதாக இருந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு


இன்று நடைபெறுவதாக இருந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 May 2018 12:00 AM GMT (Updated: 17 May 2018 12:00 AM GMT)

காவிரி பிரச்சினை, கமல்ஹாசனின் அழைப்பு குறித்து விவாதிக்க அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்க இருந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒருவகையில் தங்களது போராட்டத்தை முன் எடுத்து நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக தான் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

மேலும் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது அவர் 19-ந் தேதி ‘காவிரிக்காக தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் தான் கூட்ட உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், இன்று (வியாழக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் காவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்களிடம் பேசி, முடிவை அறிவிப்பதாக கூறினார்.

இதனிடையே இன்று நடைபெற இருந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காவிரி பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற உள்ளதால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்த கமல்ஹாசன், மற்ற தலைவர்களுக்கு தொலைபேசி மற்றும் டுவிட்டர் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள நல்லக்கண்ணு ஒப்புதல் அளிக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிப்படையாக அறிவித்து உள்ளது.

தற்போது தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பும், காவிரி பிரச்சினை தொடர்பாக கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றும், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தலைமை நிர்வாகி ஒருவர் பங்கேற்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. 

Next Story