மெட்ரோ ரெயில் சேவை, சின்னமலை-டி.எம்.எஸ். இடையே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


மெட்ரோ ரெயில் சேவை, சின்னமலை-டி.எம்.எஸ். இடையே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 19 May 2018 12:00 AM GMT (Updated: 18 May 2018 11:08 PM GMT)

சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையே சுரங்கத்திற்குள் அமைக் கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையை பாதுகாப்பு ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் சுரங்கப்பாதையில் சின்னமலை - ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையிலான மெட்ரோ ரெயில் பணிகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று சைதாப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வருகை தந்தார். அவரை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர்கள் (கட்டுமானம்) ராஜீவ் நாராயணன் திரிவேதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

சுரங்கத்தில் உள்ள சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தின் முதலாவது வழித்தடத்தில் தயார் நிலையில் இருந்த டிராலியில் பாதுகாப்பு ஆணையரின் குழுவினர் ஏறி, சுரங்கத்தில் இருந்து சாய்வு பாதைவழியாக சின்னமலை செல்லும் உயர்த்தப்பட்ட பாதைகளை ஆய்வு செய்தார். அப்போது சாய்வு தளப்பாதையில் தண்டவாள அமைப்பு, சிக்னல்கள் செயல்பாடுகளை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

பின்னர் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக நந்தனம், தேனாம்பேட்டை, ஏ.ஜி-டி.எம்.எஸ். ஆகிய இடங்களில் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு ஆணையர் சென்று பார்வையிட்டார். அங்கு பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து முதல் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளம், சிக்னல்கள் செயல்பாடு, சுரங்கத்தில் தீ தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ள விதம், சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்புகள், முதல் சுரங்கப்பாதையில் இருந்து 2-வது சுரங்கப்பாதைக்கு செல்லும் அவசர கால வழிகள், தொலை தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகள், ஒலிபெருக்கி கருவிகள் மற்றும் பயணிகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அண்ணாசாலையில் வாகனங்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருக் கும் என்பதால், அண்ணா சாலையின் மேல்பகுதியில் இருக்கும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களையும் முறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து இன்று (சனிக் கிழமை) ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சின்னமலை வரை 2-வது வழி சுரங்கப்பாதையில் ஆய்வு மேற்கொள்கிறார்.

தொடர்ந்து சின்னமலையில் இருந்து ஏ.ஜி-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை செய்யப்படுகிறது. இன்று இரவு இந்த ஆய்வுப்பணியை முடித்துக் கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்புகிறார்.

“ஒரு வாரத்தில் பயணிகள் ரெயிலை இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை பாதுகாப்பு ஆணையர் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என அதிகாரிகள் கூறினார்கள்.

ஆய்வுப்பணியின் போது, மெட்ரோ ரெயில் இயக்குனர் (இயக்குதல்) நரசிம் பிரசாத், (நிதி), முதன்மை பொதுமேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங், இணை-இயக்குனர் (மக்கள்- தொடர்பு) எஸ்.பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story