ரூ.5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது


ரூ.5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது
x
தினத்தந்தி 20 May 2018 4:30 AM IST (Updated: 20 May 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பெண்களை தேடிவருகிறார்கள்.

செங்குன்றம்,

வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 28). இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் தொழில் செய்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுவேதா (23) என்பவரை தீனதயாளன் காதலித்து இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹரினிஸ்ரீ (3) என்ற மகளும், அரவிந்த்ஸ்ரீராம் (3 மாதம்) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த வாரம் தீனதயாளனுக்கும், சுவேதாவிற்்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. கோபத்தில் சுவேதா 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை இடைமான் நகர், 11-வது தெருவைச் சேர்ந்த அன்பரசி (27) என்பவர் வீட்டிற்கு வந்தார். சுவேதா ஏற்கனவே இங்கு வந்தபோது ஏற்பட்ட பழக்கத்தால் அன்பரசி வீட்டிற்கு வந்தார்.

அன்பரசி, சுவேதா மற்றும் அவரது குழந்தைகளை தனது வீட்டில் தங்கவைத்தார். தீனதயாளன் வேலூரில் தன் மனைவி குழந்தைகளை காணாமல் தேடிக்கொண்டிருந்தார். சுவேதா கடந்த 5 நாட்களாக குழந்தைகளை அன்பரசி வீட்டில் விட்டுவிட்டு, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூலி வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.

அன்பரசியின் வீட்டு உரிமையாளர் வடிவுக்கரசி, இவர்களது தோழி எண்ணூரை சேர்ந்த பப்லி. சென்னையில் ஒரு பெரிய பணக்காரருக்கு ஆண் குழந்தை வேண்டும், 5 லட்சம் ரூபாய் செலவானாலும் பரவாயில்லை என பப்லி அன்பரசியிடமும், வடிவுக்கரசியிடமும் கூறினார்.

இதையடுத்து 3 பேரும் சேர்ந்து சுவேதாவிடம், உன் ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்றுத்தருகிறோம். அந்த பணத்தை வைத்து நீ செட்டில் ஆகிவிடலாம் எனவும், உன் கணவர் கேட்டால் குழந்தை காணாமல் போய்விட்டது என்று கூறிவிடு எனவும் மூளைச்சலவை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு சுவேதா மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சுவேதா நேற்று காலை வழக்கம்போல 2 குழந்தைகளையும் அன்பரசி வீட்டில் விட்டுவிட்டு திருமண மண்டபத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். பகல் 12 மணி அளவில் அன்பரசி சுவேதாவிடம் வந்து தொட்டிலில் படுத்திருந்த உன் ஆண் குழந்தையை காணவில்லை என கூறினார். சுவேதா பதறியடித்துக்கொண்டு பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மாதவரம் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில் மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் குழந்தையை தேடிவந்தனர். அப்போது மதியம் 3 மணி அளவில் இடைமான் நகர் 5-வது தெருவில் அன்பரசி குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

உடனே போலீசார் அன்பரசியை கைது செய்து குழந்தையை மீட்டனர். குழந்தையை சுவேதாவிடமும், அவரது கணவர் தீனதயாளனிடமும் நேற்று இரவு போலீசார் ஒப்படைத்தனர். 3 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட மாதவரம் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். தலைமறைவான வடிவுக்கரசி(48), பப்லி (50) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story