பெங்களூரு பயணம் ரத்து: தூத்துக்குடிக்கு இன்று மு.க.ஸ்டாலின் செல்கிறார்


பெங்களூரு பயணம் ரத்து: தூத்துக்குடிக்கு இன்று மு.க.ஸ்டாலின் செல்கிறார்
x
தினத்தந்தி 22 May 2018 11:00 PM GMT (Updated: 22 May 2018 9:24 PM GMT)

குமாரசாமி பதவியேற்பு விழாவுக்காக பெங்களூரு பயணத்தை ரத்துசெய்த மு.க.ஸ்டாலின், தூத்துக்குடிக்கு இன்று செல்கிறார். தலைமைச் செயலாளரை சந்தித்த பின் இதை அவர் தெரிவித்தார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதை பற்றி கவலைப்படாமல் ஆட்சியை தக்கவைத்து கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்களே தவிர, போராட்டத்தை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், மிகப்பெரிய பேரணியை நடத்திய மக்கள் மீது இந்த அரசின் ஆணைக்கேற்ப, போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர். இதனால் அங்கு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதன் உச்சகட்டமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் மேலும் அதிகமான கலவரம் நீடித்து வருகிறது. அந்த போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி இந்த அரசு கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்கவில்லை.

கோட்டையில் முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் கூடி, பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக முதல்-அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து முறையிட்டு இருக்கிறேன். உடனடியாக இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்றும், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் இறந்து விட்டதாகவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகு சுமுகமான சூழலை ஏற்படுத்த, பேச்சுவார்த்தை நடத்த இப்போதுதான் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு அங்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரியவருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு ஆட்சி நடப்பது வெட்கக்கேடானது.

தி.மு.க. சார்பில் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களை, குறிப்பாக கட்சியின் துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை, போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு அனுப்பி வைத்து, அங்கு நடந்த சம்பவங்களையும், தற்போதைய சூழ்நிலைகளையும் அறிந்து, அறிக்கையாக தர வேண்டும் என்று நான் கூறி இருக்கிறேன்.

கர்நாடக மாநில முதல்-மந்திரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு செல்ல இருந்தேன். தற்போது அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் நாளை (இன்று) தூத்துக்குடி சென்று, அங்கு நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிந்து, பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன்.

இதுவரையிலும், தமிழக வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது கிடையாது. இந்த ஆட்சியில் நடந்திருப்பது வெட்கக்கேடானது. இந்த அரசு செயலற்று கிடப்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு கிடையாது.

அதிகாரப்பூர்வமாக 10 பேர் இறந்துவிட்டதாக அறிவித்தாலும் உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும். கலவரத்தை தடுத்து நிறுத்தினால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

கோட்டையில் உட்கார்ந்து, பதவிகளை காப்பாற்றும் வேலையை ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். நியாயமாக, முதல்-அமைச்சரே அங்கு நேரில் சென்று நிலைமையை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் செல்லவில்லை என்றாலும், அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் அங்கு சென்று, சமாதானத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதைக்கூட செய்யவில்லை என்பதே எங்களுடைய பகிரங்கமான, கண்டனத்துடன் கூடிய குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீண்டகாலமாக போராடி வரும் மக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான, மனிதாபிமானமற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மிகப்பெரிய மக்கள் பேரணியை தவிர்க்க கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களில் ஒருவராவது நேரில் சென்று சந்தித்து, போராடுவோரை அமைதிப்படுத்தி இருக்கலாம். அதில் அலட்சியமாக இருந்துவிட்டு தடியும், கண்ணீர்புகை குண்டுகளும், துப்பாக்கியும் போதும் என்று ஈவு இரக்கமற்ற எண்ணத்தில் இந்த போராட்டத்தை கையாளவிட்டது அ.தி.மு.க. அரசின் இமாலய நிர்வாகத்தவறு.

அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் தோல்வியை மறைக்க ஒட்டுமொத்த மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பதும், துப்பாக்கிச்சூடு தொடர்பான செய்திகளை தொலைக்காட்சிகள் பத்திரிக்கைகள் வெளியிடக்கூடாது என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் எச்சரித்து இருப்பதும், அப்பாவி மக்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திட எங்கிருந்து உத்தரவு போயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளது.

அப்பகுதியில் சகஜ நிலைமை திரும்பிவிட்டது என்று பேட்டியளித்துக் கொண்டே, இன்னொருபுறம் துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போராட்டம் தொடங்கிய போதே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தாலோ அல்லது போராடும் மக்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி உறுதி அளித்து இருந்தாலோ இந்த விபரீத நிலைமை ஏற்பட்டு இருக்காது. அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகி இருக்காது.

குருவிகளை சுட்டுக்கொல்வது போல் மக்களை சுட்டு வீழ்த்தி விட்டு, மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பு அளிக்கும் என முதல்-அமைச்சர் அறிக்கை விடுத்திருப்பது வெட்கக்கேடானது. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டு, போலீசாரின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க, உடனடியாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்.

மக்கள் பேரணி பற்றி முன்கூட்டியே அறிந்தும் கோட்டை விட்ட, தமிழக போலீசாரை வழிநடத்தும் தலைமைப்பண்பு இல்லாமல் இருக்கும், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை உடனடியாக பதவி நீக்கம் செய்து, புதிய டி.ஜி.பி.யின் கீழ் அங்கு சகஜ நிலைமையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை போக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவும், முதல்-அமைச்சரும் உடனடியாக தூத்துக்குடி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story