தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்; 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்; 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 2:35 AM GMT (Updated: 23 May 2018 2:35 AM GMT)

துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.  இந்த ஆலையின் கழிவுகளால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று 100வது நாளாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  இதனால் போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.  65 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இடிந்தகரை, கூத்தன்குழி மற்றும் உவரி உள்பட 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.  இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Next Story