144 தடை உத்தரவு; தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு


144 தடை உத்தரவு; தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு
x

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று ஒருவர் இறந்தார். மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் இன்று  உயிரிழந்து உள்ளார்.  இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்தன.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், தூத்துக்குடி மருத்துவமனைக்கு, சிகிச்சை பெறுபவர்களை காண சென்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி போலீசார், மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர் மற்றும் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது 143, 188, 153(ஏ) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story