தூத்துக்குடியில் வேல்முருகன் கைது; விடுவிக்க கோரி சாலை மறியல்


தூத்துக்குடியில் வேல்முருகன் கைது; விடுவிக்க கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 26 May 2018 10:28 AM IST (Updated: 26 May 2018 10:28 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது விடுவிக்க கோரி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தடையை மீறி தூத்துக்குடி சென்றார். அப்போது விமானநிலையத்தில் காத்திருந்த விழுப்புரம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருமண மண்டபம்  ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேல்முருகனை விடுவிக்க கோரி உளுந்தூர்பேட்டை மடப்பட்டு பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் வாகனத்தை மறித்து தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி தாக்குதல் வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது வேல்முருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகன் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

Next Story