தமிழக சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.வாசன்


தமிழக சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 26 May 2018 7:30 PM GMT (Updated: 26 May 2018 6:39 PM GMT)

தமிழக சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய கட்டாய நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்து, இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன.

காவிரி பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு வரவில்லை. காவிரி மேலாண்மை வாரிய ஆணையம், மீனவர்கள் பிரச்சினை, மக்கள் விரும்பாத திட்டங்கள் எல்லாம் திணிக்கக்கூடிய நிலை உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் நிலுவையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாகவே மத்திய அரசு செயல்படுகிறது.

தமிழகத்தில் எந்த கட்சி அதிகமான இடங்களில் வெற்றிபெறப்போகிறது என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், நியாயமாக போராடிய மக்களை காக்கா, குருவி போல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் உடனடியாக சென்று மக்களை பார்த்து ஆறுதல் கூறி உண்மை நிலை என்ன? என்று அறிந்து இயல்பு நிலையை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

இதை ஆட்சியாளர்கள் செய்யத்தவறினால் அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். போராட்டம் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் போல் நடத்துவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story