சூரிய மின்சக்தியை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிப்பு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை


சூரிய மின்சக்தியை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிப்பு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 7 Jun 2018 10:15 PM GMT (Updated: 7 Jun 2018 8:12 PM GMT)

மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரித்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

சென்னை, 

பிளாஸ்டிக் பொருட்களால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.

பால், தயிர், எண்ணெய், மருத்துவபொருட்கள் தவிர தடிமன் வேறுபாடின்றி பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பைகள், உறிஞ்சு குழாய்கள் உள்ளிட்ட பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆராய்ச்சி

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான நோக்கமாக ‘பிளாஸ்டிக் மாசுவை வெல்வோம்’ என்று அறிவிக் கப்பட்டது. எனவே சென்னை ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் பொருள் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பது பற்றி ஆராய்ச்சி செய்தனர்.

மாணவி திவ்ய பிரியா தலைமையிலான குழுவினர், தொழில்நுட்ப உதவியாளர் பேராசிரியர் இந்துமதி நம்பி, தொழில் வழிகாட்டியான ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இதனை கண்டுபிடித்தனர். அதன்படி சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தி ஒரு கிலோ மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவில் இருந்து 700 மில்லி லிட்டர் எரிபொருளை தயாரித்து உள்ளனர்.

டீசலுக்கு மாற்றாக...

டீசலுக்கு மாற்றாக இந்த எரிபொருளை ஜெனரேட்டர்கள், தொழிற்சாலை கொதிகலன்கள், டீசல் என்ஜின்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் தினமும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவு ஏற்படுகிறது. இந்த கழிவு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இந்த கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி பெரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய்தால் டீசலைவிட விலை குறைவாக விற்க முடியும் என்று ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story