மாநில செய்திகள்

சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது + "||" + Oppose Salem Green Actor Mansoor Ali Khan arrested

சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது

சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது
பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானை சென்னையில், சேலம் போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்,

சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை-சேலம் வழிச்சாலை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையில் சென்னைக்கு செல்ல சுமார் 7 மணி நேரம் ஆகிறது.


தற்போது தாம்பரம், திருவண்ணாமலை வழியாக சேலத்துக்கு அமைய உள்ள பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டர் ஆகும். இந்த சாலை அமைந்தால் சென்னையில் இருந்து சேலத்துக்கு 3 மணி நேரத்தில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பசுமை வழிச்சாலை அமைந்தால் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கும் என விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வழியில் உள்ள மலைகளை உடைத்தும், குடைந்தும் சாலை அமைப்பதன் மூலம் இயற்கை வளங்கள் அழியும் என இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஸ் குற்றம்சாட்டினார்.

இதனிடையே பியூஸ் மானுஸ் அழைப்பை ஏற்று சேலம் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் பசுமை வழிச்சாலை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே தும்பிபாடி பகுதியில் விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற மன்சூர் அலிகான், பன்னாட்டு நிறுவனங்களுக்காக தான் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி பசுமை வழிச்சாலையை அமைத்தால் 8 பேரை வெட்டிக்கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்வேன் என ஆவேசமாக பேசினார்.

மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது அரசுக்கு எதிராக பேசுதல் (இந்திய தண்டனை சட்டம் 153), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் (இந்திய தண்டனை சட்டம் 189), அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் (இந்திய தண்டனை சட்டம் 506 பிரிவு 2), அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் (இந்திய தண்டனை சட்டம் 7 பிரிவு 1) ஆகிய பிரிவுகளில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்ய சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான போலீசார் நேற்று காலை வந்தனர்.

இது பற்றி அறிந்த மன்சூர் அலிகான் ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். போலீசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். எனினும் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்து தீவட்டிப்பட்டிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் அவரை மேட்டூர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.