சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு கூகுள், மைக்ரோசாப்ட்டில் வேலைவாய்ப்பு


சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு கூகுள், மைக்ரோசாப்ட்டில் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:00 AM IST (Updated: 2 Dec 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி.யில் பிரபல நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று தொடங்கியது.

சென்னை, 

சென்னை ஐ.ஐ.டி.யில் பிரபல நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணியிடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு செய்தனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில் வளாக வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று தொடங்கியது.

அடுத்த ஆண்டு (2019) ஜூன் மாதம் தங்களுடைய படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு இப்போதே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் இந்த வாய்ப்புக்கு மொத்தம் 1,300 மாணவர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

நேற்று காலை தொடங்கிய இந்த வேலைவாய்ப்பு முகாமில் முதல் அமர்வில் பிரபல நிறுவனங்களான மெக்கன்சி, மைக்ரோசாப்ட், கூகுள், ஊபர், ரூப்ரிக், தி போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமண்ட்ஸ், கோல்டுமேன் சச்ஸ், ஐ.டி.சி. லிமிடெட், அக்டஸ் அட்வைசர்ஸ் மற்றும் கோல்காம் உள்பட 19 நிறுவனங்கள் பங்கேற்றன.

32 வகையான பணிப்பிரிவுகளில் மாணவர்களை இந்த நிறுவனங்கள் தேர்வு செய்தன. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

முதல் அமர்வு காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. 19 நிறுவனங்களில் 85 பணி நியமன ஆணைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 25 பணி நியமன ஆணைகளும், அதனைத் தொடர்ந்து கோல்டுமேன் சச்ஸ் 7 மற்றும் ஆப்பிள் 8 பணி நியமன ஆணைகளும் வழங்கின.

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகமும் (ஓ.என்.ஜி.சி.) இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்றன. இஸ்ரோ 4 மாணவர்களையும், ஓ.என்.ஜி.சி. 3 மாணவர்களையும் தேர்வு செய்தன.

2-வது அமர்வு மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடந்தது. இதில் ஏர்பஸ், ஷெல், ஜே.பி. மோர்கன், ஸ்டார் இந்தியா, இன்டெல், கோல்காம் மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் உள்பட 23 நிறுவனங்கள் 48 வகையான பணிப்பிரிவுகளில் மாணவர்களை தேர்வு செய்தனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. பிரபலமான நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று இருக்கும் மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படும் என்று அந்தந்த நிறுவனங்கள் உறுதி அளித்து இருக்கின்றன.

வேலைவாய்ப்பு முகாம் பற்றி சென்னை ஐ.ஐ.டி.யின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் மனு சந்தானம் கூறியதாவது:-

இந்த ஆண்டுக்கான வளாக வேலைவாய்ப்பு முகாமுக்கு 1,300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 326 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று 490 வகையான பணிப்பிரிவுகளில் மாணவர்களை தேர்வு செய்கின்றன.

முதல் நாளில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இனிவரக்கூடிய நாட்களிலும் பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெற இருக்கின்றன. இந்த பணிப்பிரிவுகளில் தேர்வாகி இருக்கும் மாணவர்களின் மாத ஊதியம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று ஐ.ஐ.டி. நிறுவனங்களின் குழு முடிவு செய்து இருக்கிறது. ஆகவே அதை பற்றி சொல்ல இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story