ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் பங்களாவை நினைவு இல்லமாக மாற்ற மீண்டும் எதிர்ப்பு ‘நிபுணர்கள் குழு அமைக்கப்படும்’ என கலெக்டர் பேட்டி


ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் பங்களாவை நினைவு இல்லமாக மாற்ற மீண்டும் எதிர்ப்பு ‘நிபுணர்கள் குழு அமைக்கப்படும்’ என கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2019 2:30 AM IST (Updated: 3 Jan 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் பங்களாவை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து நடந்த 2–வது கருத்து கேட்பு கூட்டத்தில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

சென்னை,

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் பங்களாவை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து நடந்த 2–வது கருத்து கேட்பு கூட்டத்தில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜெயலலிதா இல்லம்

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ என்ற இல்லம் சென்னை போயஸ்கார்டனில் உள்ளது. அது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் 17–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, தமிழக பட்ஜெட்டில் ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கினார்.

இந்த நிலையில் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து பொதுமக்களிடம் கடந்த மாதம் (டிசம்பர்) 8–ந் தேதி கருத்துகள் கேட்டு ‘சமூக தாக்க அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அடுத்த கருத்து கேட்பு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர் சரவணன், தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு

கூட்டத்தில் போயஸ்கார்டன் பகுதியில் வசிப்பவர்களும், ஏனைய பொதுமக்களும் பங்கு பெற்றனர். அதில், போயஸ் கார்டன் குடியிருப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் நினைவு இல்லம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து குடியிருப்பு சங்கத்தை சேர்ந்த ரமா சந்திரமணி கூறும்போது, ‘போயஸ்கார்டன் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் ஜெயலலிதா. இப்போது அவருடைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அந்த பாதை முழுவதும் குப்பைக்கூளமாகிவிடும். நினைவு இல்லமாக மாற்ற விரும்பினால், எங்களின் வீடுகளை வாங்கி கொண்டு, இதேபோல் அமைதியான இடத்தை எங்களுக்கு அமைத்து தர வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் மாரி என்பவர் கூறுகையில், ‘ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது எங்கள் உயிர்மூச்சு. 8 கோடி மக்களும் இதை தான் விரும்புகிறார்கள். குடியிருப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கூறினார்.

நிபுணர்கள் குழு

கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஏற்கனவே நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்தும், அந்த பகுதி மக்களிடம் இருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டு, பதில் கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி 2–வது கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

இந்த கருத்துகளை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு அனுப்பிவிடுவோம். அவர்கள் ஏற்கனவே வரைவு அறிக்கை தாக்கல் செய்த தனிப்பட்ட அமைப்புக்கு ஒரு அறிக்கை வழங்குவார்கள். அவர்கள் பிறகு இறுதி திட்ட அறிக்கை வழங்குவார்கள். அதன்பின்னர், எங்கள் நிபுணர்கள் குழு அமைத்து அந்த அறிக்கையை கூராய்வு செய்வார்கள். அவர்கள் இறுதியாக ஒரு அறிக்கையை தருவார்கள். அதன்பிறகு முடிவு செய்து, முழு நில எடுப்பு நடவடிக்கை ஜூன் மாதம் வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story