கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு


கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 14 Jan 2019 11:35 AM IST (Updated: 14 Jan 2019 11:35 AM IST)
t-max-icont-min-icon

கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.

இதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ‌சயான், மற்றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

கொடநாடு கொலை- கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். முதல்வர் பழனிசாமி மீது புகார் இருப்பதால் தமிழக காவல்துறை விசாரிப்பது சரியல்ல என அந்த மனுவில் கூறி உள்ளார்.
1 More update

Next Story