பாராளுமன்ற தேர்தல் 2019: வரும் 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


பாராளுமன்ற தேர்தல் 2019: வரும் 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2019 5:17 AM GMT (Updated: 2019-02-05T12:53:12+05:30)

பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வருகிற 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. #AIADMK

சென்னை

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

தமிழகத்தில் எத்தனை அணிகள் போட்டியிடும்? எந்த அணியில் எந்த கட்சி இருக்கும்? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. என்றாலும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சிகளின் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

பிரதான கட்சியான அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக, நேற்று முதல் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அக்கட்சி பெற தொடங்கியுள்ளது. 

ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். 

ஏற்கனவே  அதிமுக சார்பில் கூட்டணி குறித்து பேச குழு, பிரசார ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது அதி.முக அடுத்த கட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும் 8-ந்தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு  வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story