67-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி செல்போனில் வாழ்த்து மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் வாழ்த்து செய்தி அனுப்பினர்


67-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி செல்போனில் வாழ்த்து மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் வாழ்த்து செய்தி அனுப்பினர்
x
தினத்தந்தி 2 March 2019 4:00 AM IST (Updated: 2 March 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி செல்போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 67-வது பிறந்தநாள் ஆகும். அவர் தனது பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் தனது தந்தையும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடையாததால் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.

இதுதொடர்பாக அவர் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வடிவிலான அறிக்கையில், ‘பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவதை தவிர்த்திடுங்கள். பேனர்கள் வைக்காதீர்கள். ஆடம்பர விழாக்கள் அவசியம் இல்லை.

அமைதியான, ஆர்ப்பாட்டம் இல்லாத வகையில் இயன்ற வரை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் ஆகியவற்றை அளித்திடுங்கள். ஏற்கனவே மாலைகள், சால்வைகளுக்கு பதில் புத்தகங்களை பரிசாக அளியுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை ஏழை-எளிய மக்களுக்கு வழங்கினர்.

ஆர்வமிகுதியால் தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக தனது வீட்டுக்கு வந்திட கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று அவருடைய வீட்டில் இருக்கவில்லை. சென்னை புறநகரில் உள்ள தனது மகன் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செல்போனில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட தேசிய தலைவர்களும், பல்வேறு மாநில தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் செல்போன், ‘வாட்ஸ்- அப்’, ‘டுவிட்டர்’ உள்பட சமூக வலைத்தளங்கள் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து செய்தி தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Next Story