தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை, ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை, ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 5 March 2019 2:06 AM IST (Updated: 5 March 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு போட்டியில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணை மற்றும் ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

சென்னை,

விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை கடந்த 20.2.2019 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் தருணுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையும், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற துடுப்புபடகு வீரர் லஷ்மணன் ரோகித் மரடப்பாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையும், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் வாள்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பவானிதேவிக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை அவரது தாயாரிடமும் வழங்கினார்.

மேலும் இந்தோனேஷியாவில் நடைபெற்ற 3-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற 4 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1 கோடியே 20 லட்சம், அவர்களது 4 பயிற்சியாளர்களுக்கு ரூ. 18 லட்சம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற 12 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை ரூ. 49 லட்சம், அவர்களது 4 பயிற்சியாளர்களுக்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 8 பயிற்சியாளர்களுக்கு 1 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்த சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜூடம் முதல்-அமைச்சர் வழங்கினார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story