தி.மு.க. தொகுதி ஒதுக்காதது தொண்டர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தி உள்ளது; ஜவாஹிருல்லா பேட்டி
தி.மு.க. தொகுதி ஒதுக்காதது தொண்டர்களுக்கு வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கூறும்பொழுது, தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதன்படி, காங்கிரஸ் -10, ம.தி.மு.க. - 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, இந்திய கம்யூனிஸ்டு - 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே - 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும், தி.மு.க. 20 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை.
எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து நாளை மறுநாள் முதல் ஆலோசிக்கப்படும் என கூறினார்.
இதுபற்றி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தி.மு.க. எங்களுக்கு தொகுதி ஒதுக்கவில்லை. இது தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் கட்சி தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மார்ச் 9ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story