மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மதுரை,
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடக்கிறது.
ஏப்ரல் 18-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும் எனக்கூறி அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் ஆகியவை காரணமாக மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம், மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது.
மதுரை மக்களின் வசதிக்காக இரவு 8 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் தேர்தல் ஆணையம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளை மாற்றியமைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்தல் தேதியை மாற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
Related Tags :
Next Story