தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இதுபற்றிய விசாரணையின் முடிவில் வெளியான 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.
நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.
கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.
மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்தி கொள்ளலாம்.
இருப்பினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறோம். அதில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையம், ‘நீரி’ ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இக்குழு, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை மதிப்பிடுவதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும். இக்குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய காலத்துக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர், ஏப்ரல் 23ந்தேதி, தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தமிழக பொதுப்பணித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதன்மீது இன்று நடந்த விசாரணையில், சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story