நல்லக்கண்ணுவுடன் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் பேசினார் “உங்களுக்கும், கக்கன் குடும்பத்துக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்படும்”


நல்லக்கண்ணுவுடன் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் பேசினார் “உங்களுக்கும், கக்கன் குடும்பத்துக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்படும்”
x
தினத்தந்தி 11 May 2019 8:30 PM GMT (Updated: 2019-05-12T00:45:33+05:30)

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, “உங்களுக்கும், கக்கன் குடும்பத்தினருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான குறைந்த வாடகை பிரிவு வீட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு அடுக்குமாடி கட்டிடம் கட்ட வீட்டு வசதி வாரியம் முடிவு செய்தது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்டிலும் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு அங்கு குடியிருப்போர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நல்லக்கண்ணுவும் வீட்டை காலி செய்துவிட்டு கே.கே.நகரில் தன்னுடைய மகள் வசிக்கும் பகுதியில் வாடகை வீட்டிற்கு சென்று விட்டார்.

இதேபோல் அங்கு வசித்து வந்த கக்கன் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்துவிட்டனர்.

இதுதொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று மாலை 6 மணி அளவில் தொலைபேசி மூலமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுடன் பேசினார்.

அப்போது அவர், “வீடு காலி செய்யப்பட்டதால் உங்களுக்கும் (நல்லக்கண்ணு), கக்கன் குடும்பத்துக்கும் மாற்று ஏற்பாடு செய்துதரப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருப்பதால் 23-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கும், கக்கன் குடும்பத்துக்கும் நல்ல வீடு ஒதுக்கீடு செய்யப்படும். இதுதொடர்பாக அரசும் கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும்” என்று தெரிவித்தார். இதுகுறித்து நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லோருக்கும் என்ன சட்டமோ அதுவே எனக்கும் பொருந்தும். எனக்காக சிறப்பு சலுகை எதுவும் கேட்கவில்லை. வீட்டை காலி செய்ய சொன்னார்கள். நானும் காலி செய்துவிட்டேன். அதேபோல் கக்கன் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story