அ.தி.மு.க. கட்சி பதவியில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ. ‘திடீர்’ விலகல் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் கொடுத்தார்


அ.தி.மு.க. கட்சி பதவியில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ. ‘திடீர்’ விலகல் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் கொடுத்தார்
x
தினத்தந்தி 20 May 2019 11:15 PM GMT (Updated: 2019-05-21T04:19:18+05:30)

அ.தி.மு.க. கட்சி பதவியில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகினார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார்.

சேலம்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவர் நேற்று மாலை சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வந்து அவரை திடீரென சந்தித்தார். பின்னர் தோப்பு வெங்கடாசலம் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் வெளியே வந்த தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கட்சி பதவியில் இருந்து தான் விலகியது ஏன்? என்பது குறித்து நிருபர்களுக்கு பரபரப்பான பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் வகித்து வந்த கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சரிடம் கொடுத்து இருக்கிறேன். தனிப்பட்ட என்னுடைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டேன். இந்த விலகலுக்கு காரணம் சொல்ல விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராகவும், தொண்டனாகவும் இருக்கிறேன். நான் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளிலும், 2 துறைகளின் அமைச்சராகவும் இருந்து இருக்கிறேன். இதேபோல் 8 ஆண்டு காலம் மாவட்ட செயலாளராக இருந்து உள்ளேன்.

கடந்த முறை கொங்கு மண்டலத்தின் 14 தொகுதிகளில் என்னுடைய தலைமையில் பெருந்துறையில் தான், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. தேர்தல் அறிக்கையே பெருந்துறை தொகுதியில் தான் அவர் வெளியிட்டார். ஜெயலலிதாவின் சொந்த வாகனம் என்னுடைய வீட்டில் தான் 4 நாட்கள் நின்றது. நான் அ.தி.மு.க. மற்றும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டன்.

என்னுடைய தலைமையில் சிறப்பாக தேர்தல் பணியாற்றி வெற்றியை ஜெயலலிதாவிடம் கொடுத்தேன். 2-வது முறை சட்டமன்ற தேர்தலில் கூட வெற்றி பெற்றேன். தற்போது நடைபெற்ற சூலூர் இடைத்தேர்தலில் பணி வழங்கப்பட்டது. அந்த பணியையும் செய்தேன். பதவி விலகலால் மன உளைச்சல், மனதில் பெரியசந்தோஷம் எதுவும் கிடையாது.

கருத்துக்கணிப்பு முடிவுக்கும், பதவி விலகலுக்கும் எந்த காரணமும் இல்லை. கட்சி பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக கடந்த வாரமே முடிவு செய்துவிட்டேன். முதல்-அமைச்சர் தேர்தல் பணியில் இருந்ததால் ராஜினாமா கடிதத்தை கொடுக்க முடியவில்லை. தற்போது ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி, அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story