கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பு : 7-ந் தேதி சீருடை வழங்கப்படும்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. 7-ந் தேதி சீருடை வழங்கப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 35 ஆயிரத்து 414 தொடக்கப்பள்ளிகள், 9 ஆயிரத்து 708 நடுநிலைப்பள்ளிகள், 17 ஆயிரம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 10 நாட்களுக்கு முன்கூட்டியே இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது. வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் காணப்பட்டது.
எனினும் தேர்தலுக்காக முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டதால், கோடைவிடுமுறை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றும், ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாணவர்களுக்கு பாடத்திட்டம் அதிகம் இருப்பதால், திட்டமிட்டபடி ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். அன்றைய தினம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படும்.
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சீருடை ஜூன் 7-ந் தேதி அன்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் மற்ற விலையில்லா கல்வி உபகரணங்களும் வழங்கப்படும்.
பாடப்புத்தகம், சீருடை உள்பட 14 வகையான விலையில்லா பொருட்கள் பாடநூல் கழக வினியோக மையத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் நாளையுடன் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story