முதல்-அமைச்சருடன் ஆலோசனை: ஆவின் பால் விலை விரைவில் உயருகிறது பால்வளத்துறை அமைச்சர் தகவல்


முதல்-அமைச்சருடன் ஆலோசனை: ஆவின் பால் விலை விரைவில் உயருகிறது பால்வளத்துறை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2019 5:17 AM IST (Updated: 2 Jun 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் பால் விலை விரைவில் உயருகிறது என்றும், முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சென்னை,

உலக பால் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆவின் பால் நிறுவனம் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜர், இணை நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், பொதுமேலாளர் ரமேஷ்குமார், துணை ஆணையர் கிறிஸ்துதாஸ், மக்கள் தொடர்பு அதிகாரி கோவலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஆவின் பால் மொத்த விற்பனையாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் என பலர் கவுரவப்படுத்தப்பட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் எதுவும் கிடையாது. நாங்கள் பிரச்சினை என்றதும் ஒன்றுகூடிவிடுவோம். காங்கிரஸ் கட்சி என்றாலே அது பிரச்சினை தான். அவர்களை அறையில் சிறிது நேரம் அடைத்து வைத்து திறந்து பாருங்கள். சட்டையை கிழித்து கொண்டு தான் வெளியே வருவார்கள். எங்களை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு யோக்கியதை கிடையாது.

தமிழகத்தில் மோடி, அ.தி.மு.க. எதிர்ப்பு அலை என்பது இல்லை. காங்கிரஸ் கட்சி மத்தியில் வர வேண்டும் என்று தமிழக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இது தி.மு.க.வுக்கு பதிவான ஓட்டும் இல்லை. யாருடைய எதிர்ப்பு ஓட்டும் இல்லை. அதேபோல், களத்தில் தேர்தலை சந்திக்காதவர்கள் (ஆடிட்டர் குருமூர்த்தி) தேர்தல் முடிவுகளை பற்றி சொல்லக்கூடாது.

தமிழக மக்கள் நாடாளுமன்றத்துக்கு என்றும், சட்டமன்றத்துக்கு என்றும் முடிவு எடுத்து வாக்களித்து இருக்கிறார்கள். தமிழகத்துக்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் போராடி, சட்ட மற்றும் மக்கள் பிரச்சினைகளை சந்தித்து நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய நிலைமை தான் இருக்கிறது.

மீத்தேன், ஈத்தேன், ஸ்டெர்லைட் ஆகியவற்றுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும் தான். பிரச்சினை வந்ததும் அ.தி.மு.க., பா.ஜ.க. தான் காரணம் என பிரசாரம் செய்கிறார்கள். வரலாற்று உண்மையை மறைக்க பார்க்கிறார்கள். எல்லா பிரச்சினைகளிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. சமூகத்தை சீரழித்து, மக்களை ஏமாற்றி பெறும் வாக்குகள் நிலைக்காது.

நாங்கள் மோடியை காவலாளி என்கிறோம், நீங்கள் களவாணி என்கிறீர்கள். அவருக்கு எதிராக இங்கு பிரசாரம் செய்கிறார்கள். பிறகு எப்படி மந்திரி சபையில் இடம் கேட்க முடியும். அதுபற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.

எங்களால் இப்போது திட்டங்களை மட்டும் தான் கேட்க முடியும். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களான கோதாவரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம் உள்பட பல்வேறு நல்ல திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறார்.

ஆளுமை கொண்ட தலைமையான ஜெயலலிதா இறந்த பிறகு சில பிரச்சினைகள், சோதனைகள் இயக்கத்துக்கு வந்தது. அந்த சோதனைகள், பிரச்சினைகளை படிக்கட்டாக பயன்படுத்தி வெற்றியை நோக்கி செல்வோம். எல்லா மொழிகளையும் படிக்க வேண்டும். ஆனால் தமிழ் மொழியை ஆழமாக நேசிக்க வேண்டும். இது தான் என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பால் விலை இந்த ஆண்டில் மட்டும் ரூ.4 வரை உயர்த்தி இருக்கிறார்கள். மக்கள் அதிகம் பாதிப்பு அடைந்து இருக்கிறார்களே? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, ‘நடைமுறையில் மாட்டு தீவனங்கள் விலை எல்லாம் அதிகரித்து இருக்கிறது. அந்த சூழ்நிலைக்கு ஏற்ப விலையை உயர்த்தி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாங்களும் முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வரப்போகிறது. கொள்முதல் விலையை உயர்த்த போகிறோம். விற்பனை விலை மக்களை பாதிக்காத அளவுக்கு எப்படி உயர்த்துவது? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

Next Story