தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நீடிக்கும் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நீடிக்கும் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 July 2019 5:49 AM IST (Updated: 3 July 2019 5:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நீடிக்கும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் கடிதம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- நீட் தேர்வு தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று 2 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால், மத்திய அரசு இதுவரையில் அதற்குரிய ஒப்புதலை தரவில்லை. அது மத்திய அரசின் அலமாரியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றது.

நீட் தேர்வு முடிவுகள் 5-6-2019 அன்று வெளியிடப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது வரையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, இது திட்டமிட்டு தாமதப்படுத்துவதற்கு ஒரு சதி இருக்கின்றது என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகின்றது. இதனால், மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது.

முன்னேறிய வகுப்பினருக்காக அவசர அவசரமாக மத்திய அரசு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்திருக்கின்றது. தமிழ்நாடு அரசு அதனை செயல்படுத்தினால் மருத்துவ படிப்பில் 25 சதவீத இடங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற செய்தியும் பரவலாக வந்து கொண்டிருக்கின்றது. சமூக நீதியின் தாயகத்தில் வாழக்கூடிய நம்முடைய நாக்கில் தேனைத்தடவி ஏமாற்ற நினைக்கின்றது மத்திய அரசு.

25 சதவீதம் என்ற தூண்டிலை மத்திய அரசு நம் மீது வீசி அதில் நாம் சிக்கிக்கொள்கின்றோமா என்று பார்த்துக்கொண்டிருக்கின்றது. அதில் ஒரு நோட்டம் பார்க்கின்றது. முன்னேறிய பிரிவினர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக 25 சதவீத இட ஒதுக்கீடு தருகின்றோம் என்று தாமாகவே ஒரு சுயநலத்தோடு முன்வந்து ஒரு தந்திரமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு.

சமூக நீதி காத்த வீராங்கனை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று நாம் சொல்லியிருக்கின்றோம். அதனை நீங்களும் பெருமையோடு பேசிக்கொண்டிருக் கின்றீர்கள். அந்த அடிச்சுவட்டில் தான் இப்பொழுது ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது என்று சொல்கின்றீர்கள். அதனால், நான் கேட்க விரும்புவது 25 சதவீத கவர்ச்சி வலையில் நாம் விழுந்துவிடக் கூடாது. ஆகவே, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து, இந்த அரசின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய கொள்கை என்ன? என்பதை மேலும் தாமதம் செய்துகொண்டிருக்காமல் ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றோம்.

எனவே, இப்பொழுதாவது, இந்த நேரத்திலாவது இந்த அரசு என்ன நிலையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவிக்க வேண்டும். சமூக நீதியினுடைய தொட்டில் நம்முடைய தமிழ்நாடு. ஏற்கனவே, கடைப்பிடித்துக்கொண்டிருக்கின்ற 69 சதவீத இடஒதுக்கீட்டில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டில், இந்த அரசு அசையாமல், ஆடாமல் உறுதியாக நிற்க வேண்டும் என்பதைத்தான் தி.மு.க. இன்றைக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

ஆகவே, உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது உடனே இதனை தெளிவு படுத்தி, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உடனடியாக வெளியிட்டு மாணவர்கள் விரைவில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவ கல்வி பயிலுவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும். அதுமட்டுமல்ல, உடனடியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி அதில் விவாதித்து அதன் மூலமாக ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

(இதே கருத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ்-சும் தெரிவித்தார்).

அமைச்சர் விஜயபாஸ்கர்:- மத்திய அரசு அனுப்பிய கடிதம் தொடர்பாக தான் கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இதை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அரசு, சட்ட நிபுணர்களிடமும் கருத்து கேட்டு இருக்கிறது. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றி, சட்டமாக்கி, நடை முறைப்படுத்திய ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்து பாராட்டப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை இந்த அரசு பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 350 மருத்துவ கல்வி இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு முறையை நடைமுறைபடுத்த அனைத்து மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதில் தமிழகம், கர்நாடகா தவிர மீதமுள்ள மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. அக்கடிதத்தில் மருத்துவ கல்வியினை பொறுத்தவரை 10 சதவீத இடஒதுக்கீடு அளிக் கும் பட்சத்தில் 25 சதவீத கூடுதல் மருத்துவ கல்வி இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தும் பட்சத்தில் கூடுதலாக 25 சதவீத புதிய மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதாவது 100 என்றால் 120 என்றும், 200 என்றால் 230 இடங்கள் கிடைக்கும். இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடம் போக, மீதமுள்ள இடங்கள் தமிழகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு விதிகளின் அடிப்படையிலேயே நிரப்பப்படும். இதன் மூலம் 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்தவித சமரசமும் இந்த அரசு செய்யாது.

உதாரணமாக 1000 இடங்களில் 150 இடங்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள 850 இடங்கள் கிடைக்கும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்காது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடைய கருத்தும் கேட்கப்படும். முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படாத வகையில் முடிவுகள் எடுக்கப்படும்.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தரவரிசை பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இதை வெளியிடுவதில் எந்த தடங்கலும் இல்லை. 10 சதவீத இடஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க.வும் குறிப்பிட்டது, காங்கிரசும் குறிப்பிட்டது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இதை எதிர்க்கவில்லை. ஆனால் இங்கு எதிர்க்கிறீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் 10 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்கள். எனவே இதற்கு நீங்கள் (காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ்) விளக்கம் அளிக்க வேண்டும்.

பிரின்ஸ் (காங்கிரஸ்):- இதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள். எனவே இங்குள்ள மக்களின் நிலைப்பற்றி காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும்.

மு.க.ஸ்டாலின்:- அமைச்சர் தன்னுடைய பதிலில் விரைவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர்களை அழைத்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். அதற்காக, அவருடைய பதிலை நான் வரவேற்க விரும்புகின்றேன். ஆனால், நான் இன்னும் சில செய்திகளை இந்த அவையின் கவனத்திற்கு, அமைச்சருடைய பார்வைக்கும் கொண்டு வரவிரும்புவது, இங்கு 69 சதவீத இடஒதுக்கீடு மண்டல் கமிஷன் பரிந்துரை அவற்றை எல்லாம் இந்தியாவில் நிறைவேற்றுவதற்கு காரணம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்பதை இங்கு குறிப்பிட்டுச்சொன்னார்கள். நானும் அதைத்தான் சொல்லியிருக்கின்றேன். அது வீணாகிவிடக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் கருத்து.

ஏற்கனவே நீட் தேர்வினால் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு, சமூகநீதி சிதைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தினால். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மருத்துவர்களுடைய பஞ்சம் நிச்சயம் அதிகமாக ஏற்பட்டுவிடும். ஆகவே, நான் குறிப்பிட விரும்புவது பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குகின்றோம் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறுவது, தமிழகத்தில் சமூக மற்றும் கல்வி அடிப்படையில், பின் தங்கிய பிரிவினர் இடஒதுக்கீட்டை அறவே அது நீர்த்துப்போக வைக்கும் திட்டமிட்ட நடவடிக்கை இது. இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை தான் அமைச்சர் கூறியிருக்கிறார். எங்களை பொறுத்தவரைக்கும் மத்திய அரசு இதை கொடுத்திருக்கிறது. இதை அவைக்கு தெரிவிப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையிலே தான் தெரிவிக்கிறோமே தவிர, அதை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என்பது எல்லாம் கிடையாது. இன்றைக்கு கட்சிகளுடைய எண்ணங்களின் அடிப்படையிலே தான் அரசு செயல்படுத்தும். ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும் மத்திய அரசு இன்னென்ன திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சீட்டுகள் கொடுக்கிறோம் என்று சொல்லி ஒரு அறிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும் வந்திருக்கிறது.

அந்த அடிப்படையிலே தான் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதில் என்னவென்றால், மொத்தம் 1000 இடங்கள் வந்தது என்று சொல்லியிருக்கிறார். அதில் 150 அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போய்விடுகிறது. மீதி 850 இருக்கிறது. இந்த 850-ல் 264 திறந்தவெளி போட்டிக்கு போய்விடுகிறது. மீதி 586 இடங்கள், 69 சதவிகித இடஒதுக்கீட்டில் வரும் என்று சொல்கிறார்கள். 586 இடங்கள் நம்முடைய இடஒதுக்கீட்டின் அடிப்படையிலே நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம் என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார். இதைத்தான் அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். இதை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து இதை என்ன செய்யலாம் என்று அனைவருடைய கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

பொன்முடி (தி.மு.க.):- மத்திய அரசு சொல்லும் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றால் தான் கூடுதலாக எம்.பி.பி.எஸ். இடங்களை தருவதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் அது நம்மை மிரட்டுவது போல் உள்ளது. அதற்கு பதிலாக எம்.பி.பி.எஸ். இடங் களை அதிகரித்து கேளுங்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நாங்கள் ஏதோ இதை ஏற்றுக்கொண்டதைப் போல சொல்வது, எல்லாம் தவறான கருத்து. ஏனென்றால் இது அவை, பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் பதிவாகிறது. ஆகவே, அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. அந்த கடிதத்தை இன்றைக்கு அவையினுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினுடைய தலைவர்களுக்கு எல்லாம் தெரிவிக்கின்ற அடிப்படையிலே அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆகவே, நம்முடைய அனைத்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய தலைவர்களை அழைத்து இது சம்பந்தமாக என்னென்ன கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்ற அந்த விவரத்தை எல்லாம் அவர்களிடத்திலே தெரிவித்து, அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகுதான் இதில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, எக்காரணத்தை கொண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டையே அரசு தொடர்ந்து கடைப் பிடிக்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story