ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ரெயில் புறப்பட்டது
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ரெயில் புறப்பட்டது.
சென்னை,
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் 21ந்தேதி ரூ.65 கோடி நிதியை ஒதுக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
அந்த நிதியின் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே பார்சம்பேட்டையில் உள்ள 5வது யார்டுக்கு மேட்டுசக்கர குப்பம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது.
அதே நேரத்தில் பார்சம்பேட்டை யார்டிலும் ராட்சத குழாய்கள் நிறுவும் பணியும் தீவிரமாக நடந்தது. 95 சதவீத பணிகள் முடிந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது.
ஒவ்வொரு வேகனுக்கும் 2 பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு மொத்தம் 100 பேர் தண்ணீரை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் சோதனை ஓட்டமும் முடிந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு ரெயில் வேகன்களுக்கு குடிநீர் ஏற்றும் பணி நடந்தது. ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் என்ற கணக்கீட்டின்படி 50 டேங்கரிலும் மொத்தம் 25 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்றப்பட்டது.
இந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குழாய் மூலம் தொட்டியில் இறக்கப்பட்டபின் மீண்டும் ரெயில் வேகன்கள் ஜோலார்பேட்டைக்கு திரும்பும். மொத்தம் நாள் ஒன்றுக்கு 4 முறை இதே ரெயில் குடிநீர் ஏற்றிச்செல்லும். தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
குடிநீர் ஏற்றப்பட்ட ரெயில் நேற்று காலை சென்னைக்கு புறப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 7.30 மணிக்கு குடிநீர் கொண்டுவருவதாக இருந்த ரெயில் ரத்து செய்யப்பட்டது. ரெயில் கொள்ளளவை விட 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதிகமாக நிரப்பப்பட்டதால் ரெயிலை இயக்க முடியவில்லை. இதனால் அதிகமாக நிரப்பப்பட்ட தண்ணீரை வெளியேற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பணிகள் தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சென்னைக்கு நாளை முதல் (12ந்தேதி) ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்து உள்ளது.
இதன்படி, குடிநீர் நிரப்பப்பட்ட வேகன்கள் அடங்கிய சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் ரெயில் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை புறப்பட்டது. ரெயிலை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஷ்வரன் தொடங்கி வைத்தார். ரெயில் புறப்படுவதற்கு முன் பூஜைகளும் செய்யப்பட்டன.
இந்த ரெயிலானது பெங்களூரூவில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் வழியாக வில்லிவாக்கத்துக்கு வரும். அங்கிருந்து கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும். தொடர்ந்து, ரெயில் மீண்டும் ஜோலார்பேட்டைக்கு புறப்படும். நாளொன்றுக்கு 4 முறை பயணம் செய்து 1 கோடி லிட்டர் குடிநீரை சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story